இலகுவான முறையில் நெய் முட்டை வறுவல் தயாரிக்கும் முறை பற்றி இன்றைய சமையல் குறிப்புப் பகுதியில் தெரிந்துகொள்வோம். இதனைத் தயாரிக்கத் தேவையானவை...
வேகவைத்த முட்டைகள் - ஆறு
பெரிய வெங்காயம் - இரண்டு
தக்காளிப்பழம் - இரண்டு
இஞ்சி, பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - நான்கு
மல்லித்தூள் - இரண்டு தேக்கரண்டி
மிளகுத்தூள் - அரை தேக்கரண்டி
சீரகம் - ஒரு தேக்கரண்டி
கராம்பு - ஐந்து
பட்டை - ஒன்று
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு
நெய் - நான்கு மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு ஆகியனவாகும்.
முதலில் வேக வைத்த முட்டைகளை கீறி, மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து கலந்து கொள்ளுங்கள். பின்னர் அடுப்பில் பாத்திரமொன்றை வைத்து, சீரகம், மல்லித்தூள்,பட்டை , கராம்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து வதக்கிக்கொள்ள வேண்டும்.
இவை அனைத்தும் நன்கு வதங்கிய பின்னர் அடுப்பை அணைத்து ஆறவைத்த பின்னர் பேஸ்ட் போன்று அரைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் நான்கு தேக்கரண்டி நெய் சேர்த்து நன்கு காய்ந்ததும் முட்டைகளை சேர்த்து வறுத்து எடுத்து தனியாக ஒரு தட்டில் வைத்துக்கொள்ளுங்கள். பின்னர் அதே பாத்திரத்தில் சீரகம், நறுக்கி வைத்துள்ள வெங்காயம், சிறிதளவு கறிவேப்பிலை, இஞ்சி பூண்டு விழுது, நறுக்கிய தக்காளி ஆகியவற்றை சேர்த்து சேர்த்து வதக்க வேண்டும்.
இரண்டு நிமிடங்களின் பின்னர் அரைத்து வைத்துள்ள கலவை, மஞ்சள் தூள், மிளகாய் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து ஒரு நிமிடம் மூடி நன்கு கொதிக்க விடுங்கள். பின்னர் வறுத்து தனியாக எடுத்து வைத்திருக்கும் முட்டைகளையும் சேர்த்து ஒரு நிமிடம் வரை நன்கு கிளறி எடுத்தால் நாவிற்கு சுவையான நெய் முட்டை வறுவல் தயாராகிவிடும்.