அமெரிக்காவில் 15 ஆண்டுகளாக சுகயீன விடுமுறையில் (Sick Leave) இருக்கும் ஊழியர் ஒருவர், தனக்கு சம்பள உயர்வு வழங்கப்படவில்லை எனக்கூறி தன்னுடைய நிறுவனத்தின் மீது வழக்கு தொடுத்துள்ளார்.
இவர் கடந்த 2008ம் ஆண்டு நோய்வாய்ப்பட்டதுடன் இவரது மருத்துவ அறிக்கைகளின் அடிப்படையில் கடந்த 2013ம் ஆண்டு முதல் ‘மருத்துவ ரீதியாக ஓய்வு பெற்றவராக’ (Medically Retired) கருதப்படுகின்றார்.
குறித்த நிறுவனத்தில் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இயலாமை ஓய்வூதியத் திட்ட பயனாளியாக (Disability plan) அவர் பெற்றுவந்த சம்பளத்தில் 75 சதவீத தொகையை ஒவ்வொரு மாதமும் பெற்றுக்கொண்டு வருகின்றார். இதன் மூலம் இவருக்கு வருடம் ஒன்றுக்கு சுமார் 205 இலட்சங்களுக்கும் மேற்பட்ட தொகை கிடைக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கடந்த 15 ஆண்டுகளாக தனக்கு சம்பள உயர்வு வழங்கப்படவில்லை எனக்கூறி குறித்த ஊழியர் தனது நிறுவனத்திற்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளார். தனக்கு தற்போது கிடைத்துவரும் ஓய்வூதியம் போதுமானதாக இல்லை எனவும் அவர் முறையிட்டுள்ளார்.
குறித்த வழக்கை விசாரித்த நீதிபதி இவரின் கோரிக்கையை நிராகரித்தத்துடன் செயற்பாட்டில் உள்ள ஊழியர்களே ஊதிய உயர்வைப் பெற தகுதியுடைவர்கள் என்றும் செயலற்ற ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்குவது என்பது கட்டாயம் அல்ல என்றும் மனுதாரருக்கு கிடைத்துவரும் ஓய்வூதியம் போதுமான தொகை என்றும் கூறி வழக்கை தள்ளுபடி செய்துள்ளார்.