உலகளவில் பிரபல்யமான ஏழு அதிசயங்களையும் பார்ப்பதென்பது இலகுவான விடயம் அல்ல. அதை ஏழே நாட்களில் செய்து முடித்து, கின்னஸ் சாதனை படைத்துள்ளார் பிரிட்டனைச் சேர்ந்த ஜேமி மெக்டொனால்ட்.
ஜேமி மெக்டொனால்ட் , ஏழு நாட்களில் உலகின் அனைத்து அதிசயங்களையும் பார்வையிடும் சவாலை ஏற்றுக்கொண்டபோது, பலரும் அவரை கேலி செய்து தேவையற்ற முயற்சியென்று விமர்சித்தனர்.
ஆனால் அவர் இந்த முயற்சியில் வெற்றிபெற்று, இப்போது விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார். வெவ்வேறு நாடுகளுக்கு சென்று வெவ்வேறு மனிதர்களுக்கு மத்தியில் பயணித்து இந்த அரிய சாதனையை செய்துள்ளார்.
முதலாவதாக சீனாவில் உள்ள பெருஞ்சுவரை பார்வையிட்டார்.
அதன்பின்னர் இந்தியா வந்து தாஜ் மஹாலை பார்த்தார்.
ஜோர்டானில் உள்ள பெட்ரா நகரம், ரோமில் உள்ள கொலோசியம், பிரேசில் நாட்டில் உள்ள மீட்பர் கிறிஸ்து சிலை, பெருவில் உள்ள மச்சு பிச்சு, மெக்சிகோவில் உள்ள சிச்செனிட்சா இட்சா ஆகியவற்றை பார்வையிட்டார்.
இந்த ஏழு அதிசயங்களையும் சரியாக 6 நாட்கள், 16 மணி நேரம், 14 நிமிடங்களில் அவர் பார்வையிட்டுள்ளார்.
இந்த சாதனையை செய்து முடிக்க அவர் 13 விமானங்கள், 9 பேருந்துகள், 4 புகையிரதங்கள் , 16 கார்கள் ஆகியவற்றை பயன்படுத்தி 4 கண்டங்களில் மொத்தம் 36780 கி.மீ. பயணம் செய்திருக்கிறார்.
மெக்டோனால்டின் இந்த சாதனைப் பயணத்திற்கு டிராவல்போர்ட் என்ற நிறுவனம் ஆதரவு வழங்கியிருந்தது.
வெறுமனே ஒரு சாதனை முயற்சி மாத்திர அல்ல இது, சூப்பர்ஹீரோ அறக்கட்டளை என்ற தொண்டு நிறுவனத்திற்கு பணம் திரட்டுவதே இந்த சாதனைப் பயணத்தின் பிரதான நோக்கம் ஆகும்.
அவரது இந்த சாதனை பலரையும் வியக்க வைத்திருக்கிறது. அதேநேரம் ஒரு தொண்டு நிறுவனத்துக்காக அவர் செய்த இந்த சாதனையை பலரும் பாராட்டியுள்ளனர்.
மெக்டோனால்டின் காணொளிகளும் புகைப்படங்களும் இப்போது வைரலாகி வருகிறது.