இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. குறித்த மணமக்கள் இருவரும் சுமார் மூன்று வருடங்கள் காதலித்து வந்துள்ள நிலையில் அவர்கள் இருவரின் வீட்டாரிடமும் பெரும் சவால்களுக்கு மத்தியில் திருமணத்திற்கான சம்மதத்தினையும் பெற்றுள்ளனர்.
இரு வீட்டாரின் பூரண சம்மதத்துடன் கடந்த ஞாயிறு அன்று திருமணத்திற்கான ஏற்பாடுகள் மிகவும் எளிமையான முறையில் செய்யப்பட்டன. இந்நிலையில், திருமண நாளன்று காலை மணமகளுக்கு அனைத்து அலங்காரங்களும் செய்யப்பட்டு திருமண மண்டபத்தில் தயாராக இருந்தார்.
இருப்பினும் மணமகன் மணமேடைக்கு சரியான நேரத்திற்கு வராததால் அங்கிருந்த மணமகளின் உறவினர்கள் மணமகனின் அறைக்குள் சென்று அவரைத் தேடியுள்ளனர்.
அவர் அங்கு இல்லாததனைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். தொலைபேசி மூலமாக அவரைத் தொடர்பு கொண்ட போது, தான் பேருந்தில் இருப்பதாகவும் தனது உறவினர் ஒருவரை அழைத்துவர செல்வதாகவும் கூறியுள்ளார்.
அவர் இருக்கும் இடத்தை கேட்டறிந்த மணமகள், மணக்கோலத்திலேயே அங்கு சென்றுள்ளார். இதன்பின்னர் மணமகனுக்கு திருமணம் செய்வதில் குழப்பம் மற்றும் தயக்கம் ஏற்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
இதன்பின்னர், மணமகனின் மனதை மாற்றி தனது ஆசை காதலனை திருமணத்திற்கு சம்மதிக்க வைத்துள்ளார். சுமார் இரண்டு மணிநேரம் இந்த பிரச்சினை நடந்துள்ளதுடன் இறுதியில் மணமகன் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்து திருமணம் சிறப்பாக நடைபெற்றுள்ளது.
குறித்த இந்த திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் மற்றும் காணொளிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருவதுடன் தனது வாழ்க்கைக்காக துணிச்சலுடன் செயற்பட்ட மணமகளை சமூக பலரும் சமூக வலைத்தளங்களில் பாராட்டியும் வருகின்றனர்.