அதிக வெப்ப காலங்களில் பலரது சருமம் வறட்சியாகக் காணப்படும். குறிப்பாக முகப்பருக்கள், தழும்புகள் என பலவிதமான சருமம் சார்ந்த பிரச்சினைகளைக் கொண்டவர்களுக்கு பன்னீர் சிறந்த நிவாரணியாகக் காணப்படுகின்றது. எனவே பன்னீரைப் பயன்படுத்தி எமது சருமத்தை எவ்வாறு பளபளப்பாக வைத்துக் கொள்ளலாம் என்பதைப் பற்றி இன்றைய அழகுக்குறிப்புப் பகுதியில் தெரிந்துகொள்வோம்.
இரவு நேரங்களில் தூங்குவதற்கு முன்னர் முகத்தில் பன்னீரைப் பூசி நன்கு காய்ந்த பின்னர் மறுநாள் காலையில் சுத்தமாகக் கழுவ வேண்டும். வாரத்தில் இருமுறை இவ்வாறு செய்துவர சருமம் மென்மையாகக் காணப்படும்.
கண்களைச் சுற்றி கருவளையம் காணப்படின் பன்னீரைப் பயன்படுத்தலாம். கருவளையம் உள்ள பகுதிகளில் பன்னீரைப் பூசி நன்கு மசாஜ் செய்த பின்னர் குளிர்மையான நீரால் சுத்தமாகக் கழுவிவர நாளடைவில் கருவளையம் நீங்கி சருமம் பொலிவாகக் காணப்படும்.
சிறிதளவு பன்னீருடன், கடலைமாவையும் கலந்து சருமத்தில் பூசி நன்கு மசாஜ் செய்த பின்னர் மிதமான வெந்நீரால் சுத்தமாகக் கழுவ வேண்டும். இது எமது சருமத்திலுள்ள அழுக்குகளை நீக்கி சருமத்தைப் பிரகாசமாக வைத்துக்கொள்ள உதவுகின்றது.
எனவே மேற்சொன்ன இலகுவான வழிமுறைகளைப் பின்பற்றி எமது சருமத்தைப் பாதுகாத்துக் கொள்வோம்.