இயற்கையான முறையில் எமது சரும அழகைப் பராமரித்துக்கொள்ளும் வழிமுறைகளைப் பற்றி இன்றைய அழகுக்குறிப்புப் பகுதியில் தெரிந்துகொள்வோம்.
இரண்டு தேக்கரண்டி தேனுடன் ஒரு தேக்கரண்டி எலுமிச்சம் பழச்சாறு, ஒரு தேக்கரண்டி தயிர் ஆகியவற்றைக் கலந்து சருமத்தில் பூசி 15 நிமிடங்கள் வரை நன்கு மசாஜ் செய்த பின்னர் குளிர்மையான நீரால் சுத்தமாகக் கழுவ வேண்டும். இது எமது சருமத்தை மென்மையாகவும், பொலிவாகவும் வைத்துக்கொள்ள உதவுகின்றது.
இரண்டு தேக்கரண்டி சர்க்கரையுடன் சிறிதளவு எலுமிச்சம் பழச்சாறு மற்றும் கடலைமாவைக் கலந்து சருமத்தில் பூசி 20 நிமிடங்கள் வரை நன்கு காய வைத்துக்கொள்ள வேண்டும். இந்த பேஸ்ட் நன்கு காய்ந்த பின்னர் சுத்தமாகக் கழுவிவர சருமத்தில் காணப்படும் அழுக்குகள் அனைத்தும் நீங்கி, சருமம் பளபளப்பாகக் காணப்படும்.
வாரத்தில் இருமுறை பன்னீரைக் கொண்டு முகத்திற்கு மசாஜ் செய்துவர சருமம் பிரகாசமாகவும், இளமையாகவும் காணப்படும்.
இரவில் தூங்குவதற்கு முன்னர் சிறிதளவு குங்குமப்பூவுடன், கஸ்தூரி மஞ்சள், பசுப்பால் ஆகியவற்றைக் கலந்து சருமத்தில் பூசி நன்கு மசாஜ் செய்த பின்னர் மிதமான வெந்நீரால் சுத்தமாகக் கழுவ வேண்டும். இது எமது சருமத்தை மென்மையாக வைத்துக்கொள்ள உதவுகின்றது.
எனவே மேற்சொன்ன இலகுவான வழிமுறைகளைப் பின்பற்றி எமது சருமத்தைப் பாதுகாத்துக்கொள்வோம்.