முட்டையில் அதிக அளவில் புரோட்டீன் சத்து காணப்படுகின்றது .முட்டையை உணவில் பல வடிவில் எடுத்து கொள்ளலாம். அந்த வகையில் இன்றைய தினம் முட்டை மிளகு பொடிமாஸ் எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் - முட்டை - 4 , வெங்காயம் - 1 பெரியது, தக்காளி - 2 சிறியது, இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி, மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி, மல்லித்தூள் தூள் - 1 1/2 தேக்கரண்டி, மிளகு தூள் - 3 1/2 தேக்கரண்டி, கடுகு - 1 தேக்கரண்டி, சீரகம் - 1 தேக்கரண்டி, கறிவேப்பிலை - சிறிதளவு, கொத்தமல்லி இலை - 1 கைப்பிடி, உப்பு - தேவையான அளவு, நல்லெண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை - முதலில் வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி இலை போன்றவற்றை சிறிதாக வெட்டிக்கொள்ள வேண்டும். பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம் போட்டு தாளித்த பின்னர் வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி பதம் வரும் வரை வதக்கிக்கொள்ள வேண்டும்.
அடுத்து அதில் இடித்து வைத்த இஞ்சி, பூண்டு விழுது, கறிவேப்பிலை போட்டு வதக்க வேண்டும். இஞ்சி, பூண்டு விழுது பச்சை வாசனை போனவுடன் அதில் தக்காளியை சேர்த்து வதக்க வேண்டும். தக்காளி சற்று வதங்கியதும், மஞ்சள் தூள், 3 தேக்கரண்டி மிளகு தூள், உப்பு சேர்த்து வதக்க வேண்டும்.
தக்காளி நன்றாக வதங்கியதும் முட்டையை அதில் உடைத்து ஊற்றி நன்றாக கிளற வேண்டும். முட்டை வெந்து உதிரியாக வரும் போது அரை தேக்கரண்டி மிளகு தூள், கொத்தமல்லி இலை சேர்த்து இறக்கினால் சூப்பரான முட்டை மிளகு பொடிமாஸ் தயார். இதை சப்பாத்தி, நாண், தோசையுடன் சாப்பிட சூப்பராக இருக்கும். சாதத்துடன் சாப்பிட்டாலும் அருமையாக இருக்கும்.