பாகிஸ்தான் , ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் இலங்கையின் ஹம்பாந்தோட்டை சூரியவெவ மைதானத்தில் இடம்பெற்று வந்தது.
பாகிஸ்தானில் இடம்பெற வேண்டிய ஒருநாள் தொடர் இது. அந்நாட்டில் காணப்படும் பொருளாதார , அரசியல் , உள் நாட்டுக் குழப்பநிலை காரணமாக இலங்கையில் இடம்பெற்றது.
இந்த தொடரின் முதலாவது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் 142 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இரண்டாவது ஒருநாள் போட்டியில் 1 விக்கெட் , 1 பந்து வித்தியாசத்தில் போராடி வென்றது பாகிஸ்தான்.
இந்நிலையில் மூன்றாவது ஒருநாள் போட்டி நேற்று இடம்பெற்றது. முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து, 268 ஓட்டங்களை பெற்றது.
பாகிஸ்தான் அணி சார்பாக பாபர் அசாம் 60 ஓட்டங்களையும் முகமது ரிஸ்வான் 67 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
பதிலுக்கு 269 ஓட்டங்களை இலக்காகி கொண்டு துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 48 . 4 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 209 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியடைந்தது.
இந்த வெற்றியுடன் சர்வதேச கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசையில், பாகிஸ்தான் அணி முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.
ஆசிய கிண்ணப் போட்டிகள் எதிர்வரும் 30 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், பாகிஸ்தானுக்கு கிடைத்திருக்கும் இந்த தொடர் வெற்றி பாகிஸ்தானுக்கு புது உத்வேகத்தை கொடுத்துள்ளது.