கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நிறைவுக்கு வந்த 47ஆவது தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பெண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற முன்னாள் தேசிய சம்பியனான நதீகா லக்மாலி, 23 ஆண்டு கால தனது மெய்வல்லுனர் வாழ்க்கையிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார்.
தென் மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 43 வயதான நதீகா 51.84 மீட்டர் தூரம் எறிந்து முதலிடத்தையும், ஊவா மாகாணத்தைச் சேர்ந்த எச்.பி.பி.எச் மதுவந்தி 50.39 மீட்டரைப் பதிவு செய்து இரண்டாமிடத்தையும், கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த டி.எம்.ஐ.ஹசந்தி 42.89 மீட்ட்ரைப் பதிவு செய்து மூன்றாம் இடத்தையும் பிடித்திருந்தனர்.
இந்த நிலையில் இலங்கையின் நட்சத்திர மெய்வல்லுனர் வீராங்கனையான நதீகா லக்மாலி, இம்முறை தேசிய விளையாட்டுப் போட்டிகளுடன் மெய்வல்லுனர் அரங்கிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார்.
இலங்கையின் தலைசிறந்த ஈட்டி எறிதல் வீராங்கனைகளில் ஒருவரான நதீகா லக்மாலி, 23 ஆண்டுகளுக்கும் மேலாக பெண்களுக்கான ஈட்டி எறிதலில் முன்னணி வீராங்கனையாக வலம் வருவதுடன், தேசிய விளையாட்டுப் போட்டிகள் ஈட்டி எறிதலில் 10 தடவைகள் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.