மூன்று ஒருநாள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக மேற்கிந்திய தீவுகள் 19 வயதிற்குட்பட்ட அணி இலங்கைக்கு சுற்றுலா மேற்கொண்டுள்ளது.
முதலாவது ஒருநாள் போட்டி நேற்று தம்புள்ளை ரங்கிரி மைதானத்தில் இடம்பெற்றது. நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் துடுப்பெடுத்தாட முடிவு செய்தது.
49 .1 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 223 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது. இலங்கை அணியின் பந்து வீச்சில் கருக சங்கீத் 5 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
பதிலுக்கு 224 ஓட்டங்களை இலக்காக கொண்டு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 43 .1 களில் 4 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து இலக்கை அடைந்து வாகை சூடியது.
இலங்கை அணியின் துடுப்பாட்டத்தில் ரவிஷான் 65 , சுபுன் 56 , டின்னுர 52 , ஷாருஜன் சண்முகநாதன் ஆட்டமிழக்காது 20 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
குறித்த போட்டியில் இரண்டு பிடிகளையும் ஷாருஜன் எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.இவ்விரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி எதிர்வரும் 30 திகதி தம்புள்ளையில் இடம்பெறவுள்ளது.
தமிழ் பேசும் வீரரான ஷாருஜன் சிறு வயது முதல் சிறப்பான பயிற்சிகளை எடுத்து , சிறந்த பெறுபேறுகளை வெளிப்படுத்தி இலங்கை இளையோர் அணியில் இடம் பிடித்துள்ளார்.
17 வயதாகும் ஷாருஜன் கொழும்பு St. Benedict's கல்லூரியின் மாணவனாவார். மறைந்த முன்னாள் பிரபல கிரிக்கெட் வர்ணனையாளரான டோனி கிரெய்க் இவரை வெகுவாக பாராட்டி Little Sanga என்று அழைத்தார்.
ஷாருஜனிடம் நிறைய திறமை இருக்கிறது விரைவில் அவர் இலங்கை அணியை பிரதிநிதித்துவம் செய்வார் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
அதேநேரம் பல முன்னணி கிரிக்கெட் வீரர்களும் இவரின் திறமை பாராட்டியுள்ளனர். தொடர்ச்சியாக சிறப்பாக விளையாடி இலங்கை தேசிய அணியில் இடம்பிடித்து சாதிக்க வேண்டுமென விளையாட்டுப் பிரியர்கள் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.