தூக்கத்தில் நடக்கும் நோய் மனிதர்களில் சிலருக்கு அரிதாக காணப்படும் ஒரு நோயாக உள்ளது. 11 வயது சிறுவன் தூக்கத்திலேயே சுமார் 160 கிலோமீற்றர் தூரம் நடந்து சென்ற தகவலை கின்னஸ் சாதனை அமைப்பு பகிர்ந்துள்ளதுடன் அவை தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளன.
இதேவேளை குறித்த இந்த சம்பவம் சுமார் 36 வருடங்களுக்கு முன்னர் நடந்தது என்பதையும் கின்னஸ் அமைப்பு பதிவு செய்துள்ளது.
கடந்த 1987 ஆம் ஆண்டு ஏப்ரல் ஆறாம் திகதி இந்த நிகழ்வு பதிவாகியுள்ளது. குறித்த தினம் அதிகாலை மூன்று மணியளவில் சிறுவன் ஒருவன் தண்டவாளத்தில் தடுமாறியபடி நடந்து வருவதை அவதானித்த தொடருந்து நிலைய ஊழியர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
இதில் முக்கியமான விடயம் என்னவெனில் குறித்த சிறுவன் இந்த 160 கிலோமீற்றர் தூரத்தையும் நடந்து வராமல் தன் வீட்டிற்கு அருகில் இருந்த சரக்கு ரயிலில் ஏறி வெகு தொலைவுக்கு அப்பால் இறங்கி குறித்த தண்டவாளத்தில் நடந்து சென்றுள்ளார். ஆனால் இந்த தொடருந்தில் ஏறியதோ அல்லது இறங்கியதோ சிறுவனுக்கு நினைவில் இல்லை.
இந்த விடயம் தொடர்பில் சிறுவனின் தாயாருக்கு அறியப்படுத்தப்பட்ட நிலையில் அவர் தனது மகனை தன்னுடன் அழைத்துச் சென்றுள்ளார்.
குறித்த இந்த சம்பவத்தை 36 வருடங்களுக்குப் பின்னர் கின்னஸ் அமைப்பு பதிவு செய்துள்ளதுடன் அவை சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளன.