இலங்கை மகளிர் அணி இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிராக 3 ஒருநாள் மற்றும் 3 இருபதுக்கு இருபது போட்டிகளில் விளையாடுவதற்காக இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.
முதலில் ஆரம்பமாகியுள்ள இருபதுக்கு இருபது தொடரின் முதல் போட்டியில் இலங்கை அணி தோல்வியை தழுவியது. இந்நிலையில் நேற்று இடம்பெற்ற இரண்டாவது போட்டியில் இலங்கை மகளிர் அணி அபார வெற்றிபெற்றுள்ளது.
நேற்று இடம்பெற்ற முதல் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 18 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 104 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டது. இங்கிலாந்து சார்பாக துடுப்பாட்டத்தில் சார்லி டீன் 34 ஓட்டங்களை அதிக பட்சமாக பெற்றுக்கொடுத்தார்.
பந்து வீச்சில் இலங்கை சார்பாக இனோகா ரணவீர , உதேஷிகா பிரபோதனி ,கவிஷா தில்ஹானி ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினர். பதிலுக்கு 105 என்ற இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 13.2 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 110 ஓட்டங்களை பெற்று வெற்றிபெற்றது.
இலங்கை அணியின் துடுப்பாட்டத்தில் சமரி அத்தப்பத்து 55 ஓட்டங்களையும் ஹர்ஷிகா சமரவிக்ரம 30 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். போட்டியின் சிறப்பாட்டக்காரராக சமரி அத்தப்பத்து தெரிவு செய்யப்பட்டார்.
தொடரை தீர்மானிக்கும் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவதும் இறுதியுமான T20 போட்டி எதிர்வரும் 6 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. இந்நிலையில் இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிராக இங்கிலாந்தில் வைத்து முதல் முறையாக வெற்றிபெற்று இலங்கை அணி சாதனை படைத்துள்ளது.