தன்னுடைய உடலில் ஒரே பெயரை அதிக முறை பச்சை குத்தியவர் என்ற கின்னஸ் உலக சாதனையை இங்கிலாந்தைச் சேர்ந்த 49 வயதான நபர் ஒருவர் படைத்துள்ளார். உடலில் தனது மகளின் பெயரை பச்சை குத்தியே இவர் இந்த உலக சாதனையைப் படைத்துள்ளார்.
இதற்காக அவர் தன்னுடைய ஏழு வயது மகளின் பெயரான “லூசி” என்பதனை தேர்ந்தெடுத்து பச்சை குத்தியுள்ளார்.
கடந்த 2017ம் ஆண்டு முதன்முறையாக தனது உடலில் 267 முறை லூசி என்ற பெயரை பச்சை குத்தி சாதனை படைத்திருந்த இவரின் சாதனை 2020ம் ஆண்டு முறியடிக்கப்பட்டது. அமெரிக்காவை சேர்ந்த 27 வயதான நபர் ஒருவர் தன் சொந்த பெயரையே 300 முறை உடலில் பச்சை குத்திக்கொண்டு இவரின் சாதனையை முறியடித்திருந்தார்.
இந்த நிலையில் இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்ட இவர் மீண்டும் முதல் இடத்திற்கு வர முடிவு செய்து தன்னுடைய தொடைகளில் 200 வீதம் மொத்தமாக 400 தடவைகள் தனது மகளின் பெயரை பச்சை குத்தி சாதனை படைத்துள்ளார்.
தனது மகள் பிறந்த காலகட்டத்தில், மகளுக்கு ஆதரவாகவும், பாதுகாப்பாகவும் அவரைப் பார்த்துக் கொண்ட மருத்துவமனைக்கு நிதி திரட்டுவதற்காக அவர் இந்த சாதனையை செய்ததாக கின்னஸ் உலக சாதனை சமூக வலைத்தள பக்கங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.