நம்மில் அநேகமானோர் பல வகையான வித்தியாசமான குருமா வகைகள் சாப்பிட்டிருப்பதுண்டு. காய்கறிக்கூட்டு குருமா, முள்ளங்கிகூட்டு குருமா, பனீர் பட்டாணி குருமா , மஷ்ரும் குருமா ,தயிர்குருமா என பல குருமா வகைகளை சுவைத்திருப்பீர்கள் எனினும் இட்லி, தோசை, சப்பாத்தி போன்ற உணவுகளுக்கு சரியான கறி வகைகளையோ குழம்பு வகைகளையோ தயார் செய்வதில் நாம் அவ்வப்போது குழப்பம் அடைந்து விடுகிறோம்.
இவ்வாறான தருணங்களில் எங்களுக்கு கைகொடுக்க கூடியதும் , இலகுவாக செய்யக்கூடியதும் தோசை,சப்பாத்தி, இட்லிக்கு பொருத்தமானதும் ,ஒரு முறை சாப்பிட்டால் மீண்டும், மீண்டும் தாயார் செய்து சாப்பிட தோன்றும் .இப்போது பச்சை பட்டாணி குருமா எப்படி தயார் செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
உருளைக்கிழங்கு - 2
பச்சை பட்டாணி - கால் கப்
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 1
கொத்தமல்லி தழை - ஒரு கை பிடியளவு
சாம்பார் பொடி - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்றவாறு
தேங்காய்த்துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
கசகசா - 1 டீஸ்பூன்
பொட்டுக்கடலை - 1 டேபிள்ஸ்பூன்
முந்திரிப்பருப்பு - 3
பூண்டுப்பற்கள் - 2
இஞ்சி - 1 துண்டு
பச்சை மிளகாய் - 2
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்
பட்டை - ஒரு சிறு துண்டு
கிராம்பு - 2
முதலில் உருளைக்கிழங்கை வேக வைத்து தோலுரித்து சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்வதோடு பட்டாணியையும் வேக வைத்துக் கொள்ளவும்.
கொத்தமல்லி தழை, வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். தேங்காய் துருவள், கசகசா, பொட்டுக்கடலை, முந்திரிப்பருப்பு, பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய் ஆகியவற்றை நன்றாக அரைத்தெடுக்கவும்.
ஒரு பாத்திரத்தை எடுத்து அதை அடுப்பில் வைத்து எண்ணெய்விட்டு சூடானதும் அதில் பட்டை, கிராம்பு, சோம்பு போட்டு தாளித்ததன் பின்னர், நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு நன்றாக வதக்கவும்.
வெங்காயம் வதங்கியவுடன், தக்காளியைச் சேர்த்து அத்துடன் உப்பு, மஞ்சள் தூளையும் சேர்த்து வதக்கவும். தக்காளி நன்றாக வதங்கியவுடன் மசாலா பொடியைச் சேர்த்து கிளறவும்.
பின்னர் அதில் வேக வைத்த உருளைக் கிழங்கு, பட்டாணியைச் சேர்த்து கிளறி விடவும். அத்துடன் அரைத்து வைத்துள்ள தேங்காய் துருவலையும் சேர்த்து பிரட்டி விடவும்.
பின்னர் அதில் கிழங்கு மூழ்கும் அளவிற்கு தண்ணீரைச் சேர்த்து நன்றாக கிளறி விட்டு, மூடி வைத்து கொதிக்க விடவும்.
நன்றாக கொதித்தவுடன், இறக்கி வைத்து கொத்தமல்லி தழை, எலுமிச்சை சாற்றை சேர்த்து மீண்டும் ஒரு முறை கிளறி இறக்கவும்.
இப்போது நாவிற்க்கு சுவையானதும் சூப்பரானதுமான உருளைக்கிழங்கு பட்டாணி குருமா தயார். நீங்களும் உங்கள் பிள்ளைகளுக்கு, உங்களுக்கு பிடித்தவர்களுக்கு இந்த உருளைக்கிழங்கு பட்டாணி குருமா செய்து கொடுத்து அசத்திடுங்கள் .