உலக வங்கியின் அறிக்கையின்படி, ஜப்பானின் மொத்த சனத்தொகை சுமார் 125.7 மில்லியன்களாகும். ஜப்பானியர்கள் குழந்தைகளை பெற்றுக்கொள்வதற்கு நாட்டமில்லாமல் இருப்பது தற்போது புதிய பிரச்சினைகளை ஏற்படுத்தியுள்ளது.
முப்படைகள் , சுகாதாரம் , மருத்துவம் உள்ளிட்ட பல துறைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. முதியவர்களின் எண்ணிக்கை அதிகரித்து குழந்தைகளின் எண்ணிக்கை சடுதியாக குறைந்துள்ளது.
ஜப்பானின் தேசிய தகவல் தரவின்படி அந்நாட்டு மக்கள் தொகையில் 29.1 சதவீதம் பேர் 65 அல்லது அதற்கு மேற்பட்ட வயதினராக உள்ளனர்.
இந்நிலை தொடர்ந்தால், 2040 ஆம் ஆண்டு ஆகும்போது இது 34.8 சதவீதமாக அதிகரிக்கும் என ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. முதல் முறையாக அந்நாட்டில்,10 பேரில் ஒருவர் 80 வயது நிரம்பியவராக இருப்பது தெரியவந்துள்ளது.
உலகிலேயே பிறப்பு விகிதம் குறைவான நாடுகளில் ஜப்பானும் ஒன்று. அந்த நாட்டில் பணியில் உள்ள குடிமக்களில் 65 வயதை கடந்தவர்கள் 13 சதவீதத்திற்கும் மேலே இருப்பதால் பொருளாதாரத்திலும், அதிகரிக்கும் நாட்டின் சமூக பாதுகாப்பிற்கான செலவினங்களிலும் இதன் தாக்கம் கடுமையாக உள்ளது.
1970 காலகட்டங்களில் 20 இலட்சமாக இருந்த குழந்தை பிறப்பு அந்நாட்டில் கடந்த வருட தரவுகளின்படி 8 இலட்சத்திற்கும் குறைவான நிலையை எட்டியுள்ளது.
ஜப்பானிய ஊழியர்களுக்கான வேலை பார்க்கும் நேரம் மிக அதிகம். மேலும், அந்நாட்டில் வாழ்வதற்கான செலவினங்கள் மிக அதிகம்.
இக்காரணங்களால் தம்பதிகள் குழந்தை பெற்று கொள்வதை அரசாங்கம் ஊக்குவித்தாலும், மக்கள் தயங்குகிறார்கள். ஒரு கட்டமைப்புள்ள சமூகமாக இயங்கும் ஆற்றலை ஜப்பான் இழந்து வருவதாக அந்நாட்டின் பிரதமர் ஃப்யுமியோ கிஷிடா அண்மையில் தெரிவித்துள்ளார்.
ஜப்பானின் குழந்தை பிறப்பு வீதத்தை அதிகரிக்க பல சலுகைகள் வழங்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் அந்நாட்டில் குழந்தை பிறப்பு வீதம் தொடர்ந்தும் குறைந்த அளவிலேயே காணப்படுகிறது.
குழந்தை பிறப்பு வீதம் குறைவாக உள்ள நாடுகளின் வரிசையில் 24.5 சதவீதத்துடன் இத்தாலி முதலிடத்திலும், 23.5 சதவீதத்துடன் பின்லாந்தும் இரண்டாம் இடத்திலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.