பெரும்பாலும் நாம் அனைவரும் ஒவ்வொரு சுவைகளிலான லட்டு வகைகளை சுவைத்ததுண்டு , எனினும் கொண்டைக்கடலையால் செய்யப்பட்ட லட்டுகளை அதிகமானோர் சுவைத்திருப்பது அரிது. அந்த வகையில் இன்று நாம் வெள்ளை கொண்டைக்கடலை லட்டை எவ்வாறு செய்யலாம் என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
வெள்ளை கொண்டைக்கடலை - 150 கிராம்
சர்க்கரை - 150 கிராம்
ஏலக்காய் தூள் - 1 தேக்கரண்டி
பிஸ்தா, பாதாம், பருப்பு (தூளாக்கப்பட்டது ) - தேவைக்கு ஏற்ப
எண்ணெய் - தேவையான அளவு
கேசரி பவுடர் (செம்மஞ்சள் நிறம்) - தேவைக்கு ஏற்ப
முதலில் கொண்டைக்கடலையை சுத்தம் செய்து 3 மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்கவும். பின்பு அதை வடிகட்டி மிக்சியில் சேர்த்து அரைக்கவும். பின்பு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் நெய் அல்லது எண்ணெய் ஊற்றி சூடுபடுத்தவும்.
அரைத்த கொண்டைக்கடலை மாவை தட்டையாக தட்டி எண்ணெயில் சேர்த்து பொரித்து எடுக்கவும். பின்னர் ஆறியதும் அதை மீண்டும் மிக்சியில் சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக்கொள்ள வேண்டும்.
பின்பு அடிகனமான பாத்திரத்தில் சர்க்கரை சேர்த்து அது மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி அதை அடுப்பில் வைக்க வேண்டும். ஒரு பிசுபிசுப்பு தன்மை வந்தவுடன் அடுப்பை அணைத்துவிட்டு அதில் கேசரி பவுடர், ஏலக்காய் தூள் ஆகியவற்றை சேர்த்து கலக்க வேண்டும்.
இந்த பாகு கரைசலில் அரைத்து வைத்துள்ள கொண்டைக்கடலை மாவினை சேர்த்து கிளற வேண்டும்.
இந்த கலவை பாத்திரத்தில் ஒட்டாமல் திரண்டு வரும்போது நெய்யில் வறுத்து ஒன்றிரண்டாக உடைத்து வைத்துள்ள முந்திரி, பாதாம் பருப்புக்களை அதில் சேர்க்க வேண்டும். இது இளஞ்சூடாக இருக்கும்போதே உருண்டைகளாக பிடிக்க வேண்டும்.
கடைசியாக, நெய்யில் வறுத்த பிஸ்தா, பாதாம் பருப்புக்களை லட்டுகளின் மேல் தூவவும். இப்போது சுவையான கொண்டைக்கடலை லட்டு தயார்.
இதே போல நீங்களும் மேலே தரப்பட்ட செய்முறைகளை பார்த்து நாவிற்க்கு சுவையான கொண்டைக்கடலை லட்டை தயார் செய்து உங்கள் அன்பான உறவினர்கள் , குடும்பத்துடன் சந்தோஷமாக பகிர்ந்து உண்ணுங்கள் .