மாலை வேளையில் உங்கள் குழந்தைகள் பசிக்கிறது என்று சொல்கிறார்களா? உங்கள் வீட்டில் பாஸ்தா மற்றும் முட்டை உள்ளதா? அப்படியானால் அதைக் கொண்டு ஒரு அற்புதமான மற்றும் சுவையான,ஆரோக்கியமான ஒரு உணவை செய்து கொடுங்கள். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும் இந்த முட்டை கொத்து பாஸ்தா .
முட்டை கொத்து பாஸ்தாவினை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
பாஸ்தா - 1 கப்
முட்டை - 3
பெரிய வெங்காயம் - 2
தக்காளி - 2
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
கரமசாலா - 1/2 தேக்கரண்டி
கொத்தமல்லி - சிறிது
உப்பு - சுவைக்கேற்ப
எண்ணெய் - 2 தேக்கரண்டி
சீரகம் - 1/2 தேக்கரண்டி
பூண்டு - 5 பல்
முதலில் பெரிய வெங்காயம், பூண்டு, தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். பாஸ்தாவை மென்மையாக வேக வைத்து ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி நன்றாக கலந்து வைக்கவும். அப்போது தான் ஒன்றுடன் ஒன்று ஒட்டாது.
ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகம், பூண்டு சேர்த்து தாளித்த பின்பு வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாக வதக்க வேண்டும். தக்காளி குழைய வதங்கியதும் மிளகாய் தூள், கரம் மசாலா சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
பிறகு அதில் முட்டைகளை உடைத்து ஊற்றி நன்கு கிளறி விட வேண்டும். முட்டை நன்றாக வெந்து உதிரியாக வரும் போது,அதில் வேக வைத்துள்ள பாஸ்தாவை சேர்த்து 3 நிமிடம் நன்கு கிளறி விட்டு, மேலே கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், சூப்பரான முட்டை கொத்து பாஸ்தா தயார்.இதே போல நீங்களும் சூப்பரான முட்டை கொத்து பாஸ்தாவினை இலகுவான முறையில் செய்து சாப்பிடுங்கள் .