சிறுதானிய உணவுகளில் அதிகப்படியான புரதச்சத்து மற்றும் உயிர் சத்துக்கள் அதிகளவில் உள்ளடங்கியுள்ளன. இதனால் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு உடற்பருமன், நீரிழிவு, இதய நோய் போன்றவை ஏற்படாமல் பாதுகாக்கும் தன்மையைக் கொண்டதாகவும் உள்ளது. மேலும் சிறுதானிய உணவுகளில் பலதரப்பட்ட சுவையான உணவு வகைகள் செய்யலாம் அதிலும் குரக்கன்மாவில் குரக்கன் நூடுல்ஸ், குரக்கன் சேமியா,குரக்கன் இடியப்பம், குரக்கன் அல்வா, குரக்கன் அடை மற்றும் குரக்கன் முறுக்கு, குரக்கன் கேக், குரக்கன் பிஸ்கட், போன்ற நொறுக்கு தீனி வகைகளையும் செய்யலாம்.இன்று குரக்கன் மாவில் எப்படி முறுக்கு செய்யலாம் என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
குரக்கன் மா - ஒரு கப்
அரிசி மா- அரை கப்
கடலை மா- கால் கப்
பெருங்காயத்தூள் - அரை தேக்கரண்டி
எள்- ஒரு தேக்கரண்டி
சீரகம் - 2 தேக்கரண்டி
மிளகாய்த்தூள்- ஒரு தேக்கரண்டி
உப்பு- தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
முதலில் ஒரு பாத்திரத்தில் மாவுடன் உப்பு, பெருங்காயத்தூள், எள், சீரகம், மிளகாய்த்தூள் சேர்த்து நன்றாக கிலர வேண்டும்.
அதன்பிறகு எண்ணெய்யை குறித்த மாவினது கலவையில் ஒரு குழிக்கரண்டி அளவிற்கு சேர்க்க வேண்டும். பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் விட்டு முறுக்கு மாவினை பதத்துக்கு பிசைய வேண்டும்.
பின் பாத்திரத்தில் எண்ணெய்யை ஊற்ற வேண்டும். பின்னர் எண்ணெய் கொதித்து வந்ததும் பிசைந்த மாவை முறுக்கு குழலில் போட்டு, சூடான எண்ணெய்யில் முறுக்குகளாக பிழிந்து,பொன்நிறமாகுவரை பொரித்து எடுக்கவும். இப்போது சுவையான குரக்கன் முறுக்கு தயார்.