இலங்கை கிரிக்கெட்டிற்கு புத்துயிர் கொடுப்பதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என முன்னாள் வீரர் அரவிந்த டி சில்வா கூறியுள்ளார்.
ஐ.சி.சியினால் வழங்கப்பட்ட அதியுயர் விருதான Hall Of Fame விருதைப் பெற்றுக்கொண்டு மீண்டும் நாடு திரும்பிய அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து ஊடகவியலாளர்களிடம் இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கை கிரிக்கெட் அணி போட்டிகளில் தோல்வியடைந்தமை குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர் தோல்வி என்பது உலகளாவிய அனுபவம் என்றும் இலங்கை அணி மீண்டும் பழைய நிலைக்கு திரும்புவதற்கு ஆதரவு அவசியம் எனவும் ஐக்கியம் மற்றும் இணைந்து செயற்படுவது முக்கியம் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
அதிகாரிகள் குற்றச்சாட்டுகளை சுமத்துவதை விடுத்து இலங்கை அணி தற்போதைய நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு உரிய வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை கிரிக்கெட் அதிகாரிகள் ஐ.சி.சியுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு ஐ.சி.சியின் தடை குறித்து இணக்கப்பாட்டிற்கு வரவேண்டும் எனவும் அரவிந்த டி சில்வா வேண்டுகோள் விடுத்துள்ளார்.