2023 உலக சம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி இன்று அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் பிற்பகல் 2 மணிக்கு கோலாகலமாக இடம்பெறவுள்ளது. இந்நிலையில் அவுஸ்திரேலிய அணியின் தலைவர் பெட் கம்மின்ஸ், செய்தியாளர்கள் சந்திப்பில் எதிர்கொண்ட முதல் கேள்வியே ஆடுகளம் பற்றியதாகவே இருந்தது. “நான் ஆடுகளத்தை சரியாகக் கணிக்கக் கூடியவன் இல்லை. ஆனால் கொஞ்சம் உறுதியாக இருப்பது போல் தெரிகிறது. இப்போதுதான் நீரூற்றி ரோல் செய்திருக்கிறார்கள். 24 மணி நேரம் கழித்துத்தான் கூறமுடியும். ஆனால் நல்ல ஆடுகளமாகத்தான் இருக்கும் என்று தெரிகிறது” என்று கூறியுள்ளார்.
மேலும் கம்மின்ஸ் இறுதிப் போட்டி பற்றி கூறுகையில், “ஸ்லோ பந்துகள், பவுன்சர்கள் ஆகியவற்றை தைரியமாகப் பயன்படுத்த வேண்டும். பலவகைப் பந்து வீச்சுக்களுக்கிடையே ஒரு சமநிலையைக் கண்டுப்பிடித்துக் கொள்ள வேண்டும். நாங்கள் இந்தியாவில் அந்த சமநிலையை எட்டி விட்டோம் என்றே நினைக்கிறேன். குறிப்பாக இன்னிங்ஸ் முடிவடையும் போது ஸ்லோ பவுன்சர்கள், கட்டர்கள் வேலை செய்கின்றன. ஹோம் அட்வாண்டேஜ் பற்றி கவலையில்லை, இரு அணிகளுக்கும் ஒரே ஆடுகளம் தானே. ஆம், நம் நாட்டில் நம்முடைய, நமக்கு பழக்கமான பிட்சில் ஆடுவது சாதகங்கள் நிறைந்ததே என்பதில் சந்தேகமில்லை. ஆனால் நாங்களும் இங்கு அதிகம் ஆடியிருக்கிறோம்.
ஆகவே பொறுத்திருந்து பார்ப்போம். ஏனைய எல்லா மைதானங்களை விடவும் இங்கு நாணய சுழற்சி போட்டியின் முடிவைத் தீர்மானிக்காது என்றே எனக்குத் தோன்றுகிறது. மும்பை மற்றும் பிற ஆடுகளங்களில் நாணய சுழற்சி போட்டியின் முடிவை தீர்மானித்ததைப் பார்த்தோம். அகமதாபாத்தில் அப்படியிருக்காது என்றே கருதுகிறேன். ஆனால், எதற்கும் தயாராகவே இருக்கிறோம். மீண்டும் சொல்கிறேன் பொறுத்திருந்து பார்ப்போம். எங்களிடம் திட்டங்கள் இருக்கின்றன என்பதைத்தான் இப்போதைக்கு என்னால் உறுதிபடக் கூற முடியும்” என்று அவுஸ்திரேலிய அணியின் தலைவர் தெரிவித்துள்ளார். இந்து முறை கிண்ணம் வென்றுள்ள அவுஸ்திரேலிய அணி 8 முறையாக இறுதிப்போட்டிக்கு தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.