இறுதிப்போட்டிக்குப் பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்த இந்திய அணியின் பயிற்றுவிப்பாளர் ராகுல் டிராவிட் கருத்து தெரிவிக்கையில் - இது ஒரு கடினமான நாளாகவே இருந்தது. இந்தத் தொடர் முழுவதுமே சிறப்பான ஆட்டத்தை ஆடியிருக்கிறோம்.
எங்கள் அணியினரின் செயல்பாட்டை எண்ணி பெருமைக் கொள்கிறேன். இறுதிக்கட்டத்தில் மட்டும்தான் எங்களால் வெற்றிகொள்ள முடியவில்லை.
அவுஸ்திரேலியா சிறப்பாக ஆடிவிட்டார்கள். அவர்களுக்கு வாழ்த்துகள். இரசிகர்களுக்கு எங்களின் ஆட்டம் அதிருப்தியை கொடுத்திருக்கலாம். ஆனால், இந்த தொடர் முழுவதும் இரசிகர்களுக்கு நல்ல கிரிக்கெட்டை விருந்தாக்கியிருக்கிறோம். நாங்கள் 11 நகரங்களுக்கு பயணித்து போட்டிகளில் ஆடியிருக்கிறோம். எல்லா மைதானங்களிலும் இரசிகர்கள் எங்களுக்காக திரளாக வந்திருந்து ஆதரவு தெரிவித்திருந்தார்கள்.
எங்கள் வீரர்கள் இதற்காக எவ்வளவு உழைத்திருக்கிறார்கள் என எனக்கு தெரியும். அப்படியிருக்கையில் அவர்கள் உடைந்து நிற்பதை என்னால் பார்க்க முடியவில்லை.
ஆனால், இதுதான் விளையாட்டு. இதில் இப்படியெல்லாம் நடக்கத்தான் செய்யும். அன்றைய நாளில் சிறப்பாக ஆடும் அணியே வெல்ல முடியும். நாளை எந்த மாற்றமும் இல்லாமல் சூரியன் உதிக்கத்தான் போகிறது. நாங்கள் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்வோம் என்று டிராவிட் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.