பிரபஞ்ச அழகிப்போட்டியின் இறுதிச்சுற்று இன்று காலை எல் சால்வடோர் தலைநகரில் உள்ள ஜோஸ் அடோல்போ பினெடா அரங்கில் நடந்தது.
இதில் உலக பிரபஞ்ச அழகியாக நிகரகுவா நாட்டை சேர்ந்த ஷெய்னிஸ் பலாசியோஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஷெய்னிஸ் பலாசியோசுக்கு 2022-ஆம் ஆண்டு உலக பிரபஞ்ச அழகியாக தெரிவான அமெரிக்காவின் போனிகேப்ரீயல் கிரீடத்தை சூட்டினார்.
பிரபஞ்ச அழகி பட்டத்தை வென்ற முதல் நிகரகுவா பெண் என்ற சிறப்பை ஷெய்னிஸ் பெற்றார். இறுதிச் சுற்றில் ஷெய்னிஸிடம் நீங்கள் மற்றொரு பெண்ணாக ஒரு வருடம் வாழ முடிந்தால் யாரை தேர்வு செய்வீர்கள்? என்ன காரணம் என்று கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு அவர் 18-ஆம் நூற்றாண்டின் இங்கிலாந்து தத்துவஞானியும் பெண்ணியவாதியுமான மேரி வோல்ஸ் போன்கிராப்டாக வாழ விரும்புவதாக தெரிவித்தார்.
அவர் எல்லைகளை உடைத்து பல பெண்களுக்கு வாய்ப்பளித்தார். இன்று பெண்களுக்கு எந்த வரம்புகளும் இல்லை என்று ஷெய்னிஸ் கூறினார்.
2-வது இடத்தை தாய்லாந்து அன்டோனியா போர்சில்ட்டும், 3-வது இடத்தை அவுஸ்திரேலியாவின் மொராயா வில்சனும் பிடித்தனர்.
பிரபஞ்ச அழகி பட்டத்தை வென்றுள்ள 23 வயதான ஷெய்னிஸ், தொலைக்காட்சி தொகுப்பாளர் மற்றும் மொடல் அழகியுமாவார்.
இவரை இப்போது அதிகமானவர்கள் இணையத்தில் தேடிவருகின்றனர். இவரது புகைப்படங்களும் காணொளிகளும் சமூக ஊடகங்களில் வைரலாகிவருகிறது.