தினமும் எமக்கு அத்தியாவசிய தேவையாக இருக்கின்ற உணவை ரசித்து, ருசித்து சாப்பிட நாம் எல்லோருமே விரும்புகின்றோம். சில நேரங்களில் நமக்கு தெரிந்தும், தெரியாமலும் உள்ள சமையல் கலைகளை புதிதாக கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் எம்மில் சிலருக்கு ஏற்படுகின்றது.
தற்போதைய நவீன இணைய உலகில் யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் பொழுதுபோக்கு பிரிவின் கீழ் வரக்கூடிய பெரும்பாலான காணொளிகள் உணவு மற்றும் சமையல் தொடர்பானவையாக காணப்படுவதுடன் அவை அதிகளவில் வைரலாகின்றன.
அந்த வகையில் தற்போது 85 வயதான மூதாட்டி ஒருவரின் சமையல் தொடர்பான காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளன. சாதனை செய்வதற்கும் வெற்றியடைவதற்கும் வயது ஒரு தடை அல்ல என்பதையும் இந்த மூதாட்டி நிரூபித்துள்ளார்.
90 வினாடிகள் மட்டுமே கொண்ட இவரது காணொளியில் சமையல் செய்வது எப்படி என்று நுணுக்கமாகவும், நேர்த்தியாகவும் விளக்கி கூறும் இவர் தனது சிறு வயதில் தன்னுடைய தந்தையிடம் இருந்து சமையல் கலையை கற்றுக் கொண்டதாக தெரிவித்துள்ளார்.
தற்போது பேரனின் உதவியுடன் பின்னணி இசையில் நடனம் ஆடியபடி சமையல் கலையை இவர் விளக்கி கூறும் காணொளிகளை பார்க்கும் பலரும் தங்களது வாழ்த்துக்களை சமூக வலைத்தளப் பக்கங்களில் தெரிவித்து வருகின்றனர்.