30 ஆண்டுகளுக்கும் மேலாகக் கடலில் தரைதட்டி நின்றிருந்த உலகின் மிகப்பெரிய A23a என்று அழைக்கப்படும் இந்தப் பனிப்பாறை, 1986-இல் அண்டார்டிக் கடற்கரையிலிருந்து பிரிந்து ஒரு பனித் தீவாக மாறியது.
சுமார் 4,000சதுர கி.மீ. பரப்பளவுகொண்ட இந்தப் பனிப்பாறை,லண்டன் நகரத்தைவிட இரண்டு மடங்கு பெரியது.A23a, சமீபத்திய மாதங்களில் காற்று மற்றும் நீரோட்டங்களால் உந்தப்பட்டு, அண்டார்டிக் தீபகற்பத்தின் வடக்கு முனையைக் கடந்து செல்கிறது.
இந்த பனிப்பாறை தெற்கு ஜார்ஜியாவில் தரைதட்டினால், அத்தீவில் இனப்பெருக்கம் செய்யும் பல இலட்சம் சீல்கள், பெங்குவின் மற்றும் பிற கடற்பறவைகளுக்கு சிக்கல்களை ஏற்படுத்தக்கூடுமென ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
A23a-இன் பெரும் பகுதி விலங்குகளின் இயல்பான உணவுப் பாதையை சீர்குலைத்து, அவற்றின் குஞ்சுகளுக்கு முறையாக உணவளிப்பதைத் தடுக்கும்.
அதேவேளை பெரிய பனிப்பாறைகள் உருகும்போது, அவை தம்முள்ளிருக்கும் கனிமங்களை வெளியிடுகின்றன. இவை கடல் உணவு சங்கிலியில் முக்கியமான உயிரினங்களுக்கு ஆதாரமாக உள்ளது.
பல வழிகளில் இந்த பனிப்பாறைகள் உயிர்களுக்கு முக்கியமானவை. அவை பல உயிரியல் செயற்பாடுகளுக்கு மூலப் புள்ளியாக இருக்கின்றன என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த பனிப்பாறையின் செயல்பாடுகளை ஆய்வாளர்கள் தொடர்ந்தும் கண்காணித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.