பிரான்ஸில் 1975 ஆம் ஆண்டு முதல் கருக்கலைப்பு சட்டப்பூர்வமாகவுள்ளது. இந்நிலையில், கருக்கலைப்பை பெண்களின் அடிப்படை உரிமையாக மாற்றும் வகையில் சட்ட மசோதா அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மசோதாவிற்கு ஆதரவாக 780 உறுப்பினர்களும் எதிராக 72 உறுப்பினர்களும் வாக்களித்திருந்ததுடன் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுடன் குறித்த சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது.
1958ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட அந்நாட்டின் அரசியலமைப்பில் உள்ள பெண்கள் சுதந்திரம் தொடர்பான பிரிவை மறுபரிசீலனை செய்ய நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் நேற்று நடைபெற்றது. அதில், கருக்கலைப்பு மசோதாவிற்கு ஒப்புதல் கிடைத்த நிலையில், நவீன பிரான்சின் அரசியலமைப்பு சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட 25 வது திருத்தம் இதுவாகும். 2008ஆம் ஆண்டிற்குப் பிறகு அந்நாட்டு அரசியலமைப்பில் மேற்கொள்ளப்படும் முதல் திருத்தம் இதுவாகும் என்பதுடன் இந்த சட்டத்தை நிறைவேற்றியதன் மூலம் அரசியலமைப்பில் கருக்கலைப்பு உரிமைகளை பதிவு செய்த முதல் நாடாக பிரான்ஸ் உருவெடுத்துள்ளது.
இதன்மூலம், குறைந்தபட்சம் முதல் 14 வார கர்ப்பகாலத்தில் அரச நிதியுதவியுடன் கருக்கலைப்புகளை மேற்கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்படுகின்றது. மேலும் சமூக வலைத்தளங்களில் கருக்கலைப்பு தொடர்பான எதிர்ப்பு பிரசாரங்களை மேற்கொள்ளவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கருக்கலைப்பு பெண்களின் உரிமை என போராடும் ஒரு தரப்பினர் குறித்த சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டமைக்கு பேராதரவு தெரிவித்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக பரிஸில் உள்ள ஈபிள் கோபுரம் மின் விளக்குகளால் ஒளியூட்டப்பட்டதுடன் அங்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடி தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.