பிரேசிலைச் சேர்ந்த 81 வயதான பெண் ஒருவருக்கே இந்த சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் இந்த சத்திர சிகிச்சையின் பின்னர் ஏற்பட்ட தொற்றின் காரணமாக குறித்த பெண் உயிரிழந்துள்ளார்.
கடந்த சில வருடங்களாக அடி வயிற்றில் ஏற்பட்ட வலியினால் அவதியுற்று வந்த இவர் வைத்தியசாலைக்குச் சென்று பரிசோதித்துள்ளதுடன் இதன் பின்னர் இவரின் அடி வயிற்று பகுதியில் இறந்த குழந்தை இருந்தது தெரியவந்துள்ளது.
இந்த கரு மருத்துவ முறையில் ஸ்டோன் பேபி (Stone baby) என்று குறிப்பிடப்படுகிறது. பொதுவாக கரு என்பது பெண்னின் கருப்பையில் உருவாகும். ஆனால் இவருக்கு கருப்பைக்கு வெளியே கரு உண்டாகியுள்ளது. இந்த நிலை, இடம் மாறிய கர்ப்பம் (ectopic pregnancy) என குறிப்பிடப்படுகிறது.கருப்பையை விட்டு வெளியில் வளரும் கரு, போதிய வளர்ச்சியின்றி இறந்துவிடும்.
இவரின் இளவயதில் முதன்முறை கருவுற்ற சந்தர்ப்பத்தில் இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என்று வைத்தியர்கள் கூறுகின்றனர். 7 குழந்தைகளை பிரசவித்துள்ள இவர் அண்மையில் தனது வயிற்றில் ஏற்பட்ட கடுமையான வலியினால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதன் போதே இவரின் பிரச்சினைக்கான காரணம் கண்டிறியப்பட்டிருந்ததுடன் இதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட சத்திர சிகிச்சையின் மூலம் வயிற்றில் இருந்த ஸ்டோன் பேபி நீக்கப்பட்ட நிலையில், அவருக்கு ஏற்பட்ட தொற்றின் காரணமாக உயிரிழந்துள்ளார்.