நேற்றைய தினம் மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ்- ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நடைபெற்றது. முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 125 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
126 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ரோயல்ஸ் 15.3 ஓவரிலேயே 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து இலக்கை எட்டியது. அந்த அணியின் ரியான் பராக் 39 பந்தில் 54 ஓட்டங்கள் எடுத்து சிறப்பாக விளையாடினார். மும்பை இந்தியன்ஸ் அணியானது இதுவரை தாங்கள் விளையாடிய முதல் மூன்று போட்டிகளிலும் தோல்வியை சந்தித்தது மட்டுமின்றி RCB அணிக்கு அடுத்தபடியாக தங்களது சொந்த மைதானத்தில் தோல்வியை தழுவியுள்ளார்கள்.
இந்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைவர் ஹர்திக் பாண்டியா "இன்றைய இரவு மிகவும் கடினமானது. நாங்கள் எதிர்பார்த்திருந்தது போல் எங்களுக்கு தொடக்கம் சரியாக அமையவில்லை. நான் அடித்து விளையாட விரும்பினேன். 150 முதல்160 ஓட்டங்கள் வரை நாங்கள் எடுத்திருந்தால் அது ஒரு நல்ல நிலையாக இருந்திருக்கும். ஆனால் என்னுடைய விக்கெட் அவர்களை மீண்டும் நல்ல நிலைக்கு கொண்டு சேர்த்துவிட்டது. நான் இன்னும் கொஞ்சம் அதிகமாக முயற்சி எடுத்திருக்க வேண்டும்.
நாங்கள் இதுபோன்று ஆடுகளத்தை எதிர்பார்க்கவில்லை.ஆடுகளம் எப்போதும் ஒரு துடுப்பாட்டவீரர்களுக்கே சாதகமாக இருக்கும் என கூற முடியாது. இந்த ஆடுகளம் பந்து வீச்சாளர்களுக்கு நல்ல வகையில் அமைந்தது.ஒரு அணியாக இன்னும் சிறப்பாக செயற்பட முடியும் என நாங்கள் நம்புகிறோம். ஆனால் இன்னும் கொஞ்சம் சிறப்பாக விளையாடுதலும் அதிகமான தைரியத்தை வெளிப்படுத்துவதும் எங்களுக்கு அவசியம் என அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.