இந்த நிலையில் உலகின் மிகப்பிரபலமான பன்னாட்டு நிறுவனமொன்றில் செயலியினூடாக தனது பிரயாணத்திற்குத் தேவையான வாகனத்தை முன்பதிவு செய்திருந்த பயணி ஒருவர் தனது பயணத்தை முடித்து அதற்குரிய பணத்தை செலுத்த முயன்ற வேளை அவரின் பயண கட்டணம் சுமார் 7.7 கோடி இந்திய ரூபாய் அதாவது இலங்கை மதிப்பில் 28 கோடி ரூபாய் என்று அந்த செயலியில் இணையவழி மூலமாக பற்றுச்சீட்டு காண்பிக்கப்பட்டது அவரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
குறித்த செயலியின் மூலமாக 62 இந்திய ரூபாய்க்கே அவர் தனது பயணத்திற்கான வாகனத்தை முற்பதிவு செய்துள்ளார். கடந்த மாதம் 29ஆம் திகதி காலையில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
இந்த எதிர்பாராத சம்பவத்தை எதிர்கொண்ட குறித்த வாடிக்கையாளர் அதனை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளதுடன் தற்போது குறித்த சம்பவம் வைரலாகியுள்ளது.
பயணக் கட்டணமாக சுமார் 2 கோடி இந்திய ரூபாவும் காத்திருப்பு கட்டணமாக சுமார் 5.7 கோடி இந்திய ரூபாவும் கட்டணமாக அறவிடப்பட்டிருந்தது. மேலும் அன்றைய தினம் அவருக்கு 75 சதவீதம் கழிவும் வழங்கப்பட்டிருந்ததாகவும் குறித்த பற்றுச்சீட்டில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த பயணியின் பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகியதைத் தொடர்ந்து குறித்த பன்னாட்டு நிறுவனம் இந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கோரியுள்ளதுடன் இது தொடர்பில் நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்துள்ளது.