இந்தியாவின் அஹமதாபாத்தில் கடந்த சில நாட்களாக அதிக வெப்பநிலை பதிவாகியுள்ளது.அத்துடன்,தொடர்ச்சியாக சில தினங்களுக்கு, வட மாநிலங்களுக்கு வெப்பநிலைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் அஹமதாபாத்தில் நடைபெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தின் முதலாவது தகுதிகாண் போட்டியைக் காண்பதற்காக தனது குடும்பத்தினருடன்,கொல்கத்தா அணியின் உரிமையாளரும் மற்றும் பிரபல பொலிவுட் நடிகருமான ஷாருக்கான், நரேந்திர மோடி மைதானத்திற்குச் சென்றிருந்தார்.
இதன்போது,நடிகர் ஷாருக்கானுக்கு திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக நேற்று மதியம் அஹமதாபாத்தில் உள்ள மருத்துவமனையொன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில்,தற்போது ஷாருக்கானின் உடல்நிலை சீராக உள்ளதாகவும், உடல்நிலை முழுமையாகக் குணமடைய,போதுமான அளவு ஓய்வெடுக்குமாறு மருத்துவர்கள் கூறியுள்ளதாகவும், “ஷாருக்கான் அஹமதாபாத்தில் 45 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில், நீரிழப்பால் (dehydration) அவதிப்பட்டார்” என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தகவல்களை வெளியிட்டுள்ளன.
நடிகர் ஷாருக்கான் ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பிற்குள்ளான விடயத்தை அறிந்த பல திரைப்பிரபலங்கள் மற்றும் இரசிகர்கள் பலர் தங்களது சமூக வலைத்தளங்களில் "உங்களுக்கு எதுவும் ஆகாது! நீங்கள் வெகு சீக்கிரம் நலம் பெற்று வாருங்கள் " என்று பதிவிட்டு வருகின்றார்கள்.