சரியான வகையில் நகங்களைப் பராமரிப்பது அவசியமானதொன்றாகும்.எனவே, நகங்களை அழகாக எப்படி பாதுகாக்கலாம் என்று இந்தப் பதிவில் பார்க்கலாம்.
பொதுவாகவே இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை அதிகப்படியாக வளர்ந்திருக்கும் நகங்களை வெட்டுவது நல்லது. மேலும் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் உதவும் வகையில் நீரேற்றம் மிக முக்கிய பங்கு வகிக்கின்றது. இது நகங்களின் வலிமைக்கும் உதவுகின்றது.
எனவே, தினமும் போதுமான அளவு தண்ணீர் அருந்துவது, நகங்களின் வறட்சி மற்றும் நகங்கள் உடையும் தன்மைகளைத் தடுக்க உதவுகின்றது. ஆரோக்கியமான நகங்களுக்கு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த சமநிலையான உணவை உட்கொள்வது அவசியமானதாகும். ஆகவே, நகங்களின் வலிமை மற்றும் வளர்ச்சியை மேம்படுத்த பயோட்டின் நிறைந்த பாதாம், முட்டை மற்றும் முழு தானியங்கள், vitamin E நிறைந்த கீரை, வெண்ணெய், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த சால்மன் போன்ற நல்ல கொழுப்பு நிறைந்த மீன்கள் போன்ற உணவுகளைச் சேர்த்துக் கொள்ளலாம். இவ்வாறு செய்வதன் மூலம் நகங்களைப் பராமரிப்பது மட்டுமல்லாது கூந்தல் வளர்ச்சியினையும் எம்மால் மேம்படுத்த முடியும்.
மேலும், சருமத்திற்கு பயன்படுத்தும் எண்ணெயை நகங்களிலும் தடவலாம். இது நகங்களின் மேற்புறச் செல்கள் பாதிக்கப்படுவதைத் தடுத்து, நகங்களை மிருதுவாக வைத்திருக்க உதவும்.
ஒலிவ் எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் போன்ற இயற்கை எண்ணெய்களைக் கொண்டு நகங்களை மசாஜ் செய்வதனால் நகப் பகுதியில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, நகம் வளர்ச்சியடைவதை ஊக்குவிக்கும். இது நகங்கள் பிளவுபடுவதைக் குறைக்கவும், ஈரப்பதத்துடன் வைத்திருக்கவும் உதவும்.
எனவே உங்கள் நகங்களை இவ்வாறான இயற்கை வழிமுறைகளைப் பயன்படுத்தி பராமரித்திடுங்கள்.