இந்தியாவின் பீகார் மாநிலத்திலுள்ள பிரபலமான பல்கலைக்கழகம் ஒன்றில் கடமையாற்றும் பேராசிரியை ஒருவர், வினாத்தாள்களைத் திருத்தும் மண்டபத்தில் இருந்து வினாத்தாள்களைத் திருத்தியவாறே, சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட காணொளிகள் தொடர்பில் தற்போது கடுமையான சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
சமூக வலைத்தளங்களில் தற்போது அதிகமானவர்கள் குறுகிய நேரக் காணொளிகளை பதிவு செய்து அவற்றை Reels ஆக வெளியிடுகின்றனர். இதன் மூலமாக பலரும் குறுகிய காலத்திற்குள் பிரபலமாகின்றனர். Reels மீது கொண்ட அதிக ஈர்ப்பின் காரணமாக குறித்த பேராசிரியை பல்கலைக்கழக மாணவர்கள் எழுதிய விடைகளை ,வாசித்து சரிபார்க்காது மேலோட்டமாக புள்ளிகளை வழங்கியுள்ளதுடன் அதன் காட்சிகள், குறித்த காணொளிகளில் பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ள நிலையில் அந்த மாநிலத்தில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்தப் பேராசிரியை இதற்கு முன்பும் விடைத்தாள் திருத்தும் பணியின்போது, சமூக வலைத்தளங்களில் Reels களை வெளியிட்டு சர்ச்சைகளில் சிக்கியிருந்ததுடன் அவருக்கெதிராக இதுவரையில் சட்டநடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், குறித்த பேராசிரியைக்கு எதிராக கல்வித்துறை அதிகாரிகள் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவருக்கு இனிமேல் வினாத்தாள்களை திருத்த சந்தர்ப்பம் வழங்கக் கூடாது என்றும் பலர் தங்களின் கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர்.