A குழுவுக்கான போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கனடா அணி 195 ஓட்டங்களைப் பெற்றது. இந்நிலையில் 196 ஓட்டங்களை இலக்காகக் கொண்டு, பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஐக்கிய அமெரிக்கா 17.4 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 197 ஓட்டங்களைப் பெற்று வெற்றிபெற்றது.
அமெரிக்க அணி சார்பாக அண்ட்றீஸ் கௌஸ், ஆரோன் ஜோன்ஸ் ஆகிய இருவரும் அதிரடியாக அரைச் சதங்கள் குவித்ததுடன் 3ஆவது விக்கெட்டில் 55 பந்துகளில் 131 ஓட்டங்களைப் பகிர்ந்து ஐக்கிய அமெரிக்காவின் வெற்றியை உறுதிப்படுத்தினர்.
ஆரோன் ஜோன்ஸ் 22 பந்துகளில் அரைச் சதத்தைப் பூர்த்தி செய்ததுடன் 40 பந்துகளில் 94 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். அவர் 10 ஆறு ஓட்டங்களையும் 4 நான்கு ஓட்டங்களையும் அதிரடியாக விளாசினார்.
குழு A இல் ஐக்கிய அமெரிக்கா , கனடா , இந்தியா, பாகிஸ்தான், அயர்லாந்து ஆகிய அணிகள் இருக்கும் நிலையில் , முதல் போட்டியில் வெற்றிபெற்ற ஐக்கிய அமெரிக்கா அடுத்ததாக இந்தியா , பாகிஸ்தான் , அயர்லாந்து ஆகிய அணிகளை எதிர்த்தாடவுள்ளது.