செரிமானத்திற்கு உதவக்கூடியதாகவும்,எலும்பு மற்றும் பற்களுக்கு வலு சேர்க்கக்கூடியதாகவும்,உயர் இரத்த அழுத்தத்தைத் தடுத்து,மனஅழுத்தத்தைப் போக்கி,நமது உடற்சோர்வை தடுக்கக்கூடிய பழமாக அன்னாசிப்பழம் அமைகின்றது.
அதிகமானோர் இந்தப்பழத்தை அதிகம் விரும்பி உட்கொள்ளக்காரணம்,அன்னாசியானது நமது சருமத்தில் பளபளப்பை ஏற்படுத்துவதோடு,இளமைத் தோற்றத்தை அதிகரிக்கின்றது.
இவ்வாறான பல ஆற்றலைக்கொண்ட அன்னாசிப்பழத்தைக்கொண்டு எவ்வாறு அன்னாசிப்பழ பச்சடி தயாரிக்கலாம் என இந்தப்பதிவில் பார்ப்போம்!
அன்னாசிப்பழ பச்சடி செய்யத் தேவையான பொருட்கள்
அன்னாசிப்பழம் – 1 (நன்றாக பழுத்த பழம் எடுக்கக்கூடாது)
மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி
மிளகாய்த் தூள் – கால் தேக்கரண்டி
உப்பு – ஒரு தேக்கரண்டி தயிர் – ஒரு கப்
சர்க்கரை – ஒரு தேக்கரண்டி (பொடித்தது)
மசாலா அரைக்கத் தேவையான பொருட்கள்
தேங்காய்த் துருவல் – ஒரு கப்
காய்ந்த மிளகாய் – 2
சீரகம் – ஒரு தேக்கரண்டி (இந்த மூன்றையும் சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ள வேண்டும்)
தாளிக்கத் தேவையான பொருட்கள்
தேங்காய் எண்ணெய் – ஒரு தேக்கரண்டி
கடுகு- கால் தேக்கரண்டி
உளுந்து – கால் தேக்கரண்டி
கறிவேப்பிலை – ஒரு கைபிடி
காய்ந்த மிளகாய் – 2
செய்முறை ஒரு வாணலியில் எண்ணெய் சேர்த்து சூடாக்கி, அதில் சிறிது சிறிதாக வெட்டி வைத்துக்கொண்ட அன்னாசிப்பழங்களைச் சேர்த்து குறைவான தீயில் நன்கு வதக்க வேண்டும்.
நன்கு வதக்கும் போதே அதில் சர்க்கரை,மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், உப்புச் சேர்த்து ஒரு நிமிடம் வேகவிடவும்.
இதனுடன் அரைத்து வைத்த மசாலா மற்றும் தயிர் சேர்த்து 2 நிமிடம் வேகவிடவேண்டும்.
பின்னர், ஒரு வாணலியில் எண்ணெய் சேர்த்து சூடாக்கி, கடுகு, உளுந்து, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை போன்றவற்றைத் தாளித்து, இந்த அன்னாசிப்பழக் கலவையில் சேர்க்க வேண்டும்.அவ்வளவுதான்!
இப்போது மிக இலகுவான முறையில் தயாரிக்கப்பட்ட அன்னாசிப்பழ பச்சடி தயார்! நீங்களும் இந்தப் பதிவில் உள்ளவாறு செய்முறைகளைப் பின்பற்றி வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுத்து அசத்திடுங்கள்!