பொதுவாக மழைக்காலத்தில் உடல் மற்றும் சருமப் பராமரிப்பைப் பேணுவது கடினம்.எந்த வயதுப் பிரிவினராக இருந்தாலும்,தம்மை அழகாகவும், இளமையாகவும் காட்டிக் கொள்ள யார்தான் விரும்ப மாட்டார்கள்?
கோடை மற்றும் மாரி காலத்தில் நமது சருமத்தைப் பொலிவாகவும், அழகாகவும் வைத்துக் கொள்ள என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று இந்தப் பதிவில் பார்க்கலாம்.
முதலில் நாம், கோடை காலமாக இருந்தாலும் சரி, மாரி காலமாக இருந்தாலும் சரி, நமது உடல் மற்றும் சருமத்தை அழகாக வைத்திருக்க ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ள வேண்டும். கட்டாயமாக நமது நிறைக்கேற்ப தண்ணீர் குடிக்க வேண்டும்.
மழைக்காலத்தில் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை தலைக்குக் குளிக்க வேண்டும்.இதமான சூட்டில் உள்ள வெந்நீரில் குளித்தால், நமது தோலின் நிறம் மாறாமல் இருக்கும்.
தினமும் இரவில் தூங்குவதற்கு முன்பு, ஒரு பாத்திரத்தில் வெந்நீரை ஊற்றி, அதில் உங்கள் பாதங்களை 5 நிமிடங்கள் ஊற வைத்து கைவிரல்களால் மசாஜ் செய்யுங்கள். இப்படிச் செய்து வந்தால் உடல் முழுவதுமுள்ள இறுக்கம் தளர்வது போல் இருக்கும்.
பெண்கள் மழைக்காலங்களில் தவறாமல் மஞ்சள் பூசிக் குளிக்க வேண்டும். ஏனெனில், கிருமிநாசினியான மஞ்சள் நமது சருமத்தைப் பாதுகாக்கும்.
நீங்கள் வெளியில் சென்றுவிட்டு வீட்டிற்கு வரும்போது தண்ணீரில் கால்களை நன்கு கழுவிய பின் சுத்தமான துணியால் ஈரத்தைத் துடையுங்கள்.
மழைக்காலத்தில் உடல் வறண்டு காணப்படும். இதற்கு, குளிப்பதற்கு முன்பு உடல் முழுவதும் தேங்காய் எண்ணெயைப் பூசி,சிறிது நேரம் கழித்துக் குளித்தால் உடல் வறண்டு காணப்படாது.
நீங்கள் குளிக்கும் நீரில் ஒரு கைபிடி அளவு வேப்பிலையைப் போட்டு வைத்திருந்து, சிறிது நேரம் கழித்துக் குளித்தால் உடலில் இருக்கும் கிருமிகள் இல்லாமல் போகும்.
காய்ச்சிய பசுப்பாலில் அரிசி மாவை இட்டு நன்கு குழைத்து முகம் மற்றும் உடல் முழுவதும் பூசி சிறிது நேரம் கழித்துக் குளித்தால் முகத்தில் மற்றும் தோலில் ஏற்படும் வெள்ளைப்படை நீங்கும்.
எனவே மேற்கூறிய வழிமுறைகளைப் பின்பற்றி, கோடை மற்றும் மாரி காலத்தில் உங்கள் சருமத்தைப் பராமரித்திடுங்கள்!