வயதாக வயதாக மனிதர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுவது என்பது இயற்கையானதொன்றாகக் காணப்படுகின்றது.
இது மனித சமூகத்தைப் பெரிய அளவில் பாதிக்கிறது. இக்காலகட்டத்தில் பெரும்பாலானோர் இந்த மன அழுத்தத்திற்கு உள்ளாகின்றனர்.எனவே மன அழுத்தத்தில் இருந்து விடுபட சில விடயங்களை கடைபிடித்தாலே போதும். நாம் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கலாம்.
வாழ்க்கையில் பிரச்சினைகளே வரக் கூடாது என்று எண்ணாதீர்கள். பிரச்சினைகளில்லாத வாழ்க்கை இல்லை.
எனவே, அதனை எப்படிச் சமாளிக்கலாம் என்பது பற்றித் திட்டமிடுங்கள். பொதுவாக வாசனைத்திரவியங்கள் இயல்பாகவே எங்களுடைய மனதை அமைதிப்படுத்தக்கூடியவை.
எனவே உங்கள் வீட்டில் சாம்பிராணி போடுதல் அல்லது ஊதுபத்தி கொழுத்துவதன் மூலம் மன அமைதியைப்பெறலாம்.
ஆழ்ந்த சுவாசப் பயிற்சிகள் மனதை அமைதிப்படுத்தவும், மன அழுத்தத்தைக் குறைக்கவும் உதவுகிறது.
அத்துடன் செல்லப்பிராணிகளான நாய்கள் வளர்ப்பது, அதனுடன் நேரம் செலவிடுவதனால்,நமக்கு ஏற்பட்டுள்ள இரத்த அழுத்தம் குறைவதுடன், மன அழுத்த ஹோர்மோன்களின் செயற்பாடுகளும் கட்டுப்படுத்தப்படுகின்றன. இது தனிமை உணர்வைக் குறைத்து, மகிழ்ச்சி உணர்வுகளை அதிகரிக்கச் செய்கின்றது.
இக்காலகட்டத்தில் டிஜிட்டல் திரைகள் மற்றும் சமூக ஊடகங்களில் அதிக நேரம் செலவிடுவதால் ஏராளமானவர்கள் மன அழுத்தத்திற்கு உள்ளாகின்றனர்.
எனவே சமூக வலைத்தளங்களில் நேரம் செலவிடுவதைக் குறைத்து நல்ல புத்தகங்களை வாசிக்கலாம். அல்லது நண்பர்களுடன் மைதானத்தில் விளையாடலாம். இவ்வாறான செயற்பாடுகளும் மனதிற்கு மகிழ்ச்சியைத் தரக்கூடியவையாகும்.
எனவே இவ்வாறான முயற்சிகளின் மூலம் உங்கள் மனதை எப்போதும் மகிழ்ச்சியுடன் வைத்திருங்கள்.