பெரும்பாலும் எல்லோரும் சந்திக்கும் கூந்தல் உதிர்வுப் பிரச்சினைகளில்,பெரும் பிரச்சினையாக அமைவது, பொடுகுப் பிரச்சினையாகும்.
ஒருவருக்கு பொடுகானது பல காரணங்களால் ஏற்படலாம்.வறட்சியான காலநிலை, சுற்றுச்சூழல் மாசுபாடு போன்றவை இதில் குறிப்பிடத்தக்கவை.இந்த பொடுகுப் பிரச்சினையில் இருந்து விடுபட இயற்கையான வழிமுறைகளைத் தெரிந்துகொள்வோம்.
பொடுகு நமக்கு ஏற்படுவது முதல் தடவையாக இருந்தால், நீங்கள் வீட்டில் இருக்கும் ஒரு சில எளிய பொருட்களை வைத்தே அதை எளிதாக ஆரம்பத்திலேயே விரட்டி விடலாம்.
வேப்பிலை, வேப்ப எண்ணெய், வேப்பம்பூ, எலுமிச்சை போன்றவற்றை பயன்படுத்தி எளிமையான முறையில் பொடுகு பிரச்சினையில் இருந்து வெளிவர முடியும்.
வெந்தயத்தை தலைக்குதேய்த்து குளித்தால், உடல் சூடு குறைந்து பொடுகுத் தொல்லை தீரும். மிளகுத்தூளுடன் பால் சேர்த்து தலையில்தேய்த்து சில நிமிடங்கள் ஊறியபின் குளித்தால், பொடுகுத் தொல்லை நீங்கும். அத்துடன் தேங்காய் எண்ணெயில் வெந்தயத்தை சேர்த்துக் காய்ச்சி, தலையில் தேய்த்து வந்தால், பொடுகுப் பிரச்சினை நீங்கும்.
கற்றாழையின் ஜெல்லை எடுத்து தலையில் நன்றாக தடவி மசாஜ் செய்து, இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் பொடுகுப் பிரச்சினையில் இருந்து விடுபடுவதுடன்,நமது கூந்தலையும் மிருதுவாகப் பேண முடியும்.
வேப்பம் பூவை அரைத்து அதில் எலுமிச்சைச்சாறு கலந்து, அந்த விழுதையும் தலையில் தேய்த்துக் குளித்து வந்தாலும் பொடுகுத்தொல்லை தீரும்.
வேப்பிலைக் கொழுந்து, துளசி ஆகியவற்றை நன்கு அரைத்து தலையில் தேய்த்து சிறிதுநேரம் கழித்துக் குளித்தால் பொடுகுத்தொல்லை நீங்கும். அத்துடன் துளசி, கறிவேப்பிலையை அரைத்து எலுமிச்சம் பழச்சாற்றுடன் கலந்து தலையில் சிறிது நேரம் ஊறவைத்து 20 நிமிடங்களின் பின்பு குளித்தால் பொடுகுப் பிரச்சினை நீங்கும்.
எனவே இவ்வாறான இயற்கை வழிமுறைகளைப் பின்பற்றி பொடுகுத் தொல்லையில் இருந்து விடுபடுங்கள்.