பொதுவாக பழங்கள் மற்றும் காய்கறிகளில் உள்ள விதைகள் பலவிதமான மருத்துவ குணங்களைக் கொண்டது. இருப்பினும் அவற்றில் உள்ள மருத்துவ பயன்களை நாம் முழுமையாக அறிந்திடாமலேயே அதனைப் பயன்படுத்தி வருகின்றோம்.
அந்த வகையில் குளிர்பானங்களில் பயன்படுத்தும் சியா விதைகளில் பலவிதமான சத்துக்களும் மருத்துவ குணங்களும் நிறைந்துள்ளது. எனவே சியா விதைகளின் நன்மைகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
ஒமேகா 3 கொழுப்பு அமிலம் மீன் வகைகள், விதைகள் போன்ற உணவு வகைகளில் அதிகம் இவை காணப்படும். அதேபோல் சியா விதைகளிலும் 'ஒமேகா 3' கொழுப்பு அமிலம் அதிகம் உள்ளது. சால்வியா என்னும் தாவரத்தின் கறுப்பு நிற விதைதான் இந்த சியா விதைகள் என்று அழைக்கப்படுகிறது. இது புதினா குடும்பத்தைச் சார்ந்தது. இந்த சியா விதைகளை பழங் காலங்களிலிருந்தே பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த சியா விதைகளில் ஃபைபர் – 11 கிராம், புரோட்டீன் – 4 கிராம், கொழுப்புச் சத்து – 9 கிராம், கால்சியம் – 18%, மாங்கனீஸ் – 30%, பொஸ்பரஸ் 27% அடங்கியுள்ளது. இதை தவிர 22 வகையான அமினோ அமிலங்கள் நிறைந்துள்ளது. இதைத் தவிர துத்தநாகம், நியாசின், பொட்டாசியம், தையமின் மற்றும் விட்டமின் பி2 போன்ற ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளது. நம் உடலில் இருக்கும் நார்ச்சத்தின் அளவை அதிகரிக்க சியா விதைகளை உட்கொள்ளலாம். நார்ச்சத்து அதிகம் கொண்டுள்ள உணவு வகைகளைச் சாப்பிடும்போது புற்றுநோய், இதய நோய், நீரிழிவு, செரிமானக் கோளாறு போன்றவற்றிலிருந்து தற்காத்துக்கொள்ள முடியும்.
மேலும் மாரடைப்பு பிரச்சனை உள்ளவர்கள் மற்றும் மாரடைப்பு வராமல் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் அனைவரும் இந்த சியா விதைகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இதயத்தை ஆரோக்கியமாக பாதுகாக்கலாம். அத்துடன் தினமும் உணவில் நாம் சியா விதைகளை சேர்த்து கொள்வதினால் உடலுக்கு புத்துணர் கிடைப்பதுடன், உடலில் ஏற்படும் முதுகு வலி, இடுப்பு வலி, கை கால் வலி போன்றவை குணமாகும், உடல் எடை குறையும், செரிமானத் திறன் அதிகரிக்கும். எனவே இவ்வாறான சிறப்புவாய்ந்த சியா விதைகளைப்பயன்படுத்தி பயன்பெற்றிடுங்கள்.