ஹம்பாந்தோட்டையில் நேற்று நடைபெற்ற இப்போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 275 ஓட்டங்களைக் குவித்தது.
பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் மகளிர் அணி, 34.5 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 115 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியடைந்தது.
இத்தொடரின் முதல் போட்டியில் 6 விக்கெட்டுக்களினாலும் , இரண்டாவது போட்டியில் 5 விக்கெட்டுக்களினாலும் இலங்கை மகளிர் அணி வெற்றியீட்டியிருந்தது.
இந்த வெற்றியின் மூலம் இலங்கை அணி பல சாதனைகளை படைத்துள்ளது.
இதன் மூலமாக கடந்த 16 வருடங்களில் மேற்கிந்திய மகளிர் அணியுடனான இரு தரப்பு ஒருநாள் சர்வதேச தொடரில் இலங்கை மகளிர் அணி வெற்றி பெற்றமை இதுவே முதற்தடவையாகும்.
அதேவேளை, மேற்கிந்திய மகளிர் அணிக்கு எதிரான ஒருநாள் சர்வதேச தொடரில் சகல போட்டிகளிலும் இலங்கை அணி வெற்றியீட்டி வெள்ளையடிப்பு செய்தமை இது இரண்டாவது தடவையாகும்.
அதேபோன்று 3 ஆவது போட்டியில் இலங்கை மகளிர் அணி 160 ஓட்டங்களால் வெற்றி பெற்றமை ஒருநாள் சர்வதேச போட்டிகளில் இலங்கை மகளிர் அணி ஓட்டங்கள் அடிப்படையில் பெற்ற மிகப் பெரிய வெற்றியாகும்.
கடந்த 2002 ஆம் ஆண்டில் பாகிஸ்தான் மகளிர் அணியை 155 ஓட்டங்களால் வெற்றி பெற்றமையே இதுவரை இலங்கை மகளிர் அணியின் மிகப் பெரிய வெற்றியாக இருந்தது.
இதேவேளை இவ்விரு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகளைக் கொண்ட T20 தொடர் எதிர்வரும் 24, 26 மற்றும் 28 ஆம் திகதிகளில் ஹம்பாந்தோட்டையில் நடைபெறவுள்ளது.