பெண்களின் அழகில் முக்கிய பங்கு வகிப்பது அவர்களின் கூந்தல் .
இன்றைய சூழலில் கூந்தல் உதிர்வு என்பது மிகப்பெரிய பிரச்சினையாகவுள்ளது.
இதற்கென்று எளிய தீர்வுகள் பல உள்ளது.அவற்றைப் பின்பற்றி ஓரளவு கூந்தல் உதிர்வதைச் சரி செய்ய முடியும்.முதலில் கூந்தல் உதிர்வதற்கு என்ன காரணம் என்பதை கண்டுபிடிக்க வேண்டும்.
ஹோர்மோன்கள் சரியாக இருந்தால், கூந்தல் அடர்த்தியாகவும், ஆரோக்கியமாகவும் வளரும்.
அதேபோல, உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடுகள் காரணமாகவும், கூந்தல் உதிரலாம்.
இதற்கு சத்தான உணவு சாப்பிடுவது அவசியம்.அதேபோல, மன அழுத்தம் காரணமாகவும் கூந்தல் உதிரலாம். ஆகவே நம்முடைய கூந்தலுக்கும், உண்ணும் உணவிற்கும் நேரடித் தொடர்பு உள்ளது. அதேபோல நம்முடைய கூந்தலுக்கும், மனதுக்கும் நேரடித் தொடர்பு உள்ளது எனவும் பல ஆய்வுகள் சொல்கின்றது.
எனவே ஆரோக்கியமான உணவு + மகிழ்வான மனநிலை + போதுமான உறக்கம் போன்றவையே கூந்தல் வளர்ச்சியைத் தீர்மானிக்கின்றன.
கூந்தலின் வளர்ச்சிக்கு இரும்பு, ஜின்க், கொழுப்பு அமிலங்கள், விட்டமின்கள் தேவைப்படுகின்றன.
கூந்தல் உதிராமல் இருக்கவும்,அடர்த்தியாக வளரவும் எவற்றைப் பயன்படுத்தலாம் என இந்தப் பதிவில் பார்க்கலாம்.
இதில், கீரைகள் முதலிடத்தைப் பிடிக்கின்றன.அதிலும் முருங்கைக்கீரையை சூப் வைத்து அல்லது ரசம் வைத்து சாப்பிடுவது மிகவும் நல்லது.
அதேநேரம் கறிவேப்பிலையை எந்த முறையிலும் எடுத்துக் கொள்ளலாம்.அதனை,எப்படிச் சாப்பிட்டாலும் நல்லதுதான். தேங்காய் எண்ணெயுடன் காய்ச்சி தலைக்கு தடவினால் கூந்தல் அடர்த்தியாகவும்,கருமையாகவும் வளரும்
அதேபோல செம்பருத்திப் பூக்களையும், செம்பருத்தி இலைகளையும் கழுவி அதை ஈரமில்லாமல் அரைத்து
தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து சூடாக்கி கூந்தலுக்கு பயன்படுத்தலாம்.
வெண்டைக்காயைக் கொதிக்க வைத்த தண்ணீரில் சிறிது எலுமிச்சம் சாறு பிழிந்து, அந்த தண்ணீரில் கூந்தலை அலசினால், தலைமுடி பளபளப்பாகவும் உறுதியாவும் இருக்கும்.
ஆகவே செயற்கை பொருட்களை விடுத்து இயற்கையாகக் கிடைக்கும் பொருட்களைப் பயன்படுத்துவதனால் கூந்தலினை ஆரோக்கியமாக வைத்திருக்க முடியும்.