19 வயதுக்குட்பட்ட இலங்கை அணியின் துணைத் தலைவராக சண்முகநாதன் ஷாருஜன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கொட்டாஞ்சேனை புனித ஆசீர்வாதப்பர் கல்லூரி அணியின் தலைவரும் விக்கெட் காப்பாளருமாவார்.
தென் ஆபிரிக்காவில் இந்த வருட ஆரம்பத்தில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் 5 போட்டிகளில் 118 ஓட்டங்களைப் பெற்றதுடன் 7 ஆட்டமிழப்புகளில் (5 பிடிகள், 2 ஸ்டம்ப்கள்) பங்களிப்புச்
செய்திருந்தார்.
இதேவேளை, 19 வயதுக்குட்பட்ட இலங்கை அணியின் தலைவராக காலி, மஹிந்த கல்லூரி வீரர் தினுர களுபஹன நியமிக்கப்பட்டுள்ளார்.
அவரும் 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியில் சகலதுறைகளிலும் பிரகாசித்திருந்தார். 3 அரைச் சதங்களுடன் 196 ஓட்டங்களைப் பெற்ற அவர், 5 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருந்தார்.
19 வயதுக்குட்பட்ட இலங்கை அணிக்கு பயிற்றுவிப்பாளராக முன்னாள் வீரர் ருவன் கல்பகே நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் இத்தொடரில் 19 வயதுக்குட்பட்ட இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் இரண்டு அணிகளுக்கும் இடையிலான நான்கு நாள் இளையோர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் இரண்டும் இடம்பெறவுள்ளது.