நடிகை தமன்னா தனது தனித்துவமான நடிப்பினாலும் அழகினாலும் பல இரசிகர்களை தன்வசம் வைத்துள்ளார். தமிழில் 'கேடி' திரைப்படத்தின் மூலம் அறிமுகமான தமன்னா, 15 ஆண்டுகளுக்கு மேல் திரைத்துறையில் நடித்து வருகிறார்.
இந்தநிலையில்,இந்தியாவில் பெங்களூரில் உள்ள பாடசாலைப் புத்தகங்களில் நடிகை தமன்னாவைப் பற்றிய பாடம் இருப்பதாக வெளிவந்த தகவல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாக பாடசாலைப் பாடப் புத்தகத்தில் தேசத் தலைவர்கள், சுதந்திர போராட்டத் தலைவர்கள், அறிஞர்கள், அறிவியல் மேதைகள் உள்ளிட்டவர்களின் வாழ்க்கை வரலாறு தான் பாடமாக வைக்கப்படும். அத்துடன் கலைத்துறையில் சேர்ந்த சிலரும் பெரும் சாதனை செய்திருந்தால் அவர்களது பாடமும் இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, பெங்களூரில் உள்ள தனியார் பாடசாலை ஒன்றில் 7ஆம் வகுப்புப் பாடப்புத்தகத்தில் சிந்தி மக்களின் வாழ்க்கை என்ற தலைப்பின் கீழ் தமன்னாவைப் பற்றிய வாழ்க்கைக் குறிப்புகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து குறித்த பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களின் பெற்றோர் இவ்விடயம் தொடர்பில் எதிர்ப்பினை வெளியிட்டதுடன் கல்வி நிர்வாகத்திற்கு புகாரளித்துள்ளனர்.
இந்நிலையில் இவ்விடயம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.