'பரியேறும் பெருமாள்' திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான மாரி செல்வராஜ் கடைசியாக 'மாமன்னன்' திரைப்படத்தை இயக்கினார்.
அந்தத் திரைப்படம் விமர்சன ரீதியிலும் வசூலிலும் சாதனை படைத்தது. அதனையடுத்து தற்போது 'வாழை' என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார் மாரி செல்வராஜ். இத்திரைப்படத்தில் கலையரசன், நிகிலா விமல், பிரியங்கா நாயர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
'வாழை' திரைப்படம் முழுக்க முழுக்க சிறுவர்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் 'வாழை' திரைப்படத்தின் கதை குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி வாழைத்தாரை ஏற்றிக்கொண்டு செல்லும் பாரவூர்தி கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி சிறுவர்கள் உயிரிழந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த கதைக்களம் அமைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
இதேவேளை சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்தத் திரைப்படத்தின் முதல் பாடல் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.