இங்கிலாந்தின் செல்டன்ஹாம் மைதானத்தில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான 2ஆவது இளையோர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 53 ஓட்டங்களினால் இங்கிலாந்து இளையோர் அணி வெற்றிபெற்று தொடரை 1-0 என்ற அடிப்படையில் கைப்பற்றியுள்ளது.
19 வயதிற்குட்பட்ட இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது இளையோர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கடந்த 16ஆம் திகதி ஆரம்பமாகி நேற்று நிறைவடைந்ததுடன், இங்கிலாந்து சகலதுறைகளிலும் பிரகாசித்து மிக இலகுவான வெற்றியினைப் பதிவு செய்தது.
இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை இளையோர் அணி அதன் முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 153 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.
பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து இளையோர் அணி அதன் முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 477 ஓட்டங்களைக் குவித்தது.
இன்னிங்ஸ் தோல்வியிலிருந்து மீள்வதற்கு 324 ஓட்டங்களைப் பெறவேண்டியிருந்த இலங்கை இளையோர் அணி, அதன் இரண்டாவது இன்னிங்ஸில் 271 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுத் தோல்வியடைந்தது.
இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை இளையோர் அணி, இங்கிலாந்து இளையோர் அணிக்கெதிரான இளையோர் ஒருநாள் கிரிக்கெட் தொடரை 1 - 2 என்ற கணக்கில் இழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.