பேன் என்பது, மனிதர்கள் மூலம் பரவும் ஒரு சிறிய வகை ஒட்டுண்ணி. கூந்தலின் அழகைக் கெடுப்பதில் பேன்களுக்குப் பெரும்பங்கு உண்டு.
பேன்கள் அதிக அளவில் உற்பத்தியாகும் தன்மை கொண்டது. இதனால் குழந்தைகளும் பெண்களும் அதிகமாக அவதிப்படுகிறார்கள்.
வயிற்றில் ஏற்படும் பூச்சியினால் பாதிப்பு வந்தால் நாம் மருந்து எடுத்துக்கொள்கிறோம். அதுபோல, உடலுக்கு வெளியே தலைகளில் ஒட்டுண்ணி வகை பேன்களை எவ்வாறு அகற்றுவது என்று பார்க்கலாம்.
துளசி மற்றும் வேப்பிலையை நன்றாக அரைத்து, அதை தலைமுடி வேர்களில் படும்படி தேய்த்து, சிறிது நேரம் கழித்து தலைக்குக் குளித்துவிடுங்கள். இவ்வாறு வாரம் இரண்டு முறை செய்தால் பேன் தொல்லை இருக்காது.
எலுமிச்சைச் சாறு மற்றும் வெங்காயச் சாறு இரண்டையும் சம அளவில் எடுத்து, பஞ்சில் நனைத்து தலைமுடி வேர்களில் படுமாறு தடவி வந்தால் அதன் மணம் தாங்காமல் தலைக்குக் குளிக்கும் போது பேன்கள் தானாகவே வெளியேறிவிடும்.
பூண்டை நன்கு அரைத்து அதில் கொஞ்சம் எலுமிச்சைச் சாறு கலந்து தலையில் தடவி 30 நிமிடங்களின் பின்பு தலைக்குக் குளித்தால் பேன்கள் அகலும். வாரம் ஒரு முறை செய்யலாம்.
கடுகு எண்ணெயை மிதமாக சூடாக்கி, தலை முழுவதும் தடவி, 15 நிமிடங்கள் ஊறவிடவும். பின்பு, சீயக்காய்த்தூள் அல்லது ஷாம்பூ போட்டு தலைக்குக் குளித்தால் பேன் தொல்லை நீங்கும்.
இலேசாக சூடாக்கிய நல்லெண்ணெயைக் குழந்தைகள் மற்றும் பெண்களின் தலையில் நன்றாகத் தடவி, 30 நிமிடங்களின் பின்பு, சீப்பால் நன்கு சீவினால், பேன்கள் அனைத்தும் வெளியே வந்துவிடும்.
இவ்வாறான முறைகளை வாரம் மூன்று முறை தவறாமல் செய்து வந்தால், பேன் மற்றும் ஈறுத் தொல்லையிலிருந்து முற்றிலும் விடுபடலாம்.