திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறன என்று மூதாதையர்கள் கூறுவார்கள். இருப்பினும் தங்களுக்குள் ஏற்படும் பலவிதமான முரண்பாடுகள் காரணமாக அநேகமான தம்பதிகள் விவாகரத்து பெற்றுச் செல்கின்றனர்.
ஆனால், அண்மையில் டுபாயில் நடைபெற்ற திருமணம் ஒன்றில், குவைத் நாட்டைச் சேர்ந்த ஒரு தம்பதியினர் மிகக் குறுகிய காலப்பகுதிக்குள் விவாகரத்துப் பெற்றுள்ளனர்.
உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஆகியோரின் பங்கேற்புடன் மிகவும் கோலாகலமான முறையில் நீதிபதி முன்னிலையில் திருமணம் முடித்த குறித்த தம்பதியினர் மணமேடையினை விட்டு கீழிறங்கிய நிலையில், மணமகள் கால் தடுமாறி கீழே விழுந்தார். அப்போது, கை கொடுத்துத் தாங்க வேண்டிய மணமகன் அவரைப் பார்த்து, ”முட்டாள், நீ பார்த்து நடக்கமாட்டாயா ? ” என்று கேட்டதுடன், இதன் காரணமாக மணப்பெண் மனரீதியில் பெரும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளார்.
திருமணம் நடைபெற்று முடிந்த சில நிமிடங்களிலேயே இவ்வாறு அவமரியாதை செய்யும் கணவர், எதிர்காலத்தில் எப்படி நடந்து கொள்வார் என்பதைப் பற்றி யோசித்த குறித்த மணமகள், உடனடியாக நீதிபதியை அணுகி, தனக்கு விவாகரத்து தருமாறு கேட்டுள்ளார். இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதியும் விவாகரத்து கொடுத்துள்ளதுடன் திருமணம் முடிந்து வெறும் 3 நிமிடங்களில் அந்த பந்தம் முடிவிற்கு வந்துள்ளது.
கடந்த 2004ஆம் ஆண்டில் பிரிட்டனில் திருமணம் முடிந்து வெறும் 90 நிமிடங்களில் ஒரு தம்பதியினர் விவாகரத்து பெற்றுள்ளனர். ஆனால், உலகிலேயே மிகவும் குறுகிய காலத்தில் விவாகரத்து பெற்ற தம்பதியினராக குறித்த குவைத் தம்பதியினர் மாறியுள்ளனர்.