மங்களகரமான மஞ்சளின் மகிமை கால காலமாக எல்லோரும் அறிந்த விடயமே. மஞ்சள் தேய்த்துக் குளிப்பது என்பது அழகுக்காக மட்டுமல்ல. முகம், கை, கால்களில் வளரும் தேவையற்ற உரோமங்களையும் அகற்றவும்தான்.
அதுமட்டுமல்லாது தேவையற்ற கிருமிகளையும் எமது உடலை நெருங்கவிடாது. எனவே மஞ்சள் பூசிக் குளிப்பதனால் ஏற்படும் நன்மைகளை இந்தப் பதிவில் காணலாம்.
மஞ்சள் பூசிய முகத்துக்கென்று ஒரு தனி அழகு உண்டு. ஆனால், அதில் வெறும் அழகு மட்டுமல்ல ஏராளமான மருத்துவ குணங்களும் உண்டு. மஞ்சள் பூசிக் குளிப்பதால் தோல் சுருக்கம் ஏற்படுவது தடுக்கப்படுவதோடு, பாதங்களில் தோன்றும் பித்த வெடிப்புகளும் நீங்கும்.
பொதுவாக மஞ்சள் எமது தோலில் உள்ள வியர்வைச் சுரப்பிகளைத் தூண்டி அழுக்கை வெளியேற்றும் தன்மை கொண்டது. இதில் உள்ள வாசனையால் நல்ல பக்றீரியாக்களைப் பாதுகாத்து, வைரஸ் தொற்று வரவிடாமல் செய்யும்.மேலும் முகப்பருக்கள், வெயிலில் ஏற்படும் சருமப் பிரச்சினைகளுக்கும் மஞ்சள் ஒரு நல்ல தீர்வாக இருக்கிறது.
மேலும் எலுமிச்சைச் சாற்றை மஞ்சளுடன் சேர்த்து சருமத்தில் பூசினால் சருமத்தில் உள்ள இறந்த செல்களை அகற்ற முடியும். அதுமட்டுமல்லாது கஸ்தூரி மஞ்சளை அரைத்து லேசாக சூடுபடுத்தி காயம் ஏற்பட்ட இடத்தில் தடவினால், வீக்கமும் வலியும் குறையும். எனவே இத்தனை நன்மைகள் நிறைந்த மஞ்சளைப் பயன்படுத்தி சரும ஆரோக்கியத்தை மேம்படுத்திடுங்கள்.