2022 ஆம் ஆண்டு இயக்குநர் பி.எஸ் மித்ரன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியாகிய திரைப்படம் 'சர்தார்'. இத்திரைப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. இத்திரைப்படத்தில் இரட்டை வேடங்களில் நடித்திருந்தார் நடிகர் கார்த்தி.
இத்திரைப்படத்தின் இரண்டாவது பாகம் வெளியாவது ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், 'சர்தார் 2' திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் கடந்த மாதம் ஆரம்பமானது. இத்திரைப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார்.
இந்த நிலையில், ‘சர்தார் 2’ திரைப்படத்தின் கதாநாயகியாக மாளவிகா மோகனன் அல்லது பிரியங்கா மோகன் ஆகிய இருவரில் ஒருவர் நடிக்க வாய்ப்பு இருப்பதாகக் கூறப்பட்ட நிலையில், தற்போது இந்தத் திரைப்படத்தின் நாயகி மாளவிகா மோகனன் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
விஜய் நடித்த ’மாஸ்டர்’ திரைப்படம் மற்றும் விக்ரம் நடித்துள்ள ’தங்கலான்’ உட்பட சில தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ள மாளவிகா மோகனனுக்கு ‘சர்தார் 2’ பட வாய்ப்பு நிச்சயம் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.