நம் அருகில் இருக்கக்கூடிய நல்ல விஷயங்கள் நமது கண்ணுக்குத் தென்படுவதே இல்லை. அந்த வகையில், நம் வீட்டிற்கு அருகில் வளர்ந்திருக்கக்கூடிய ஏராளமான மருத்துவக் குணங்கள் நிறைந்த இலைகள் குறித்து இந்தப் பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
நம் வீட்டில் இருக்கக்கூடிய வேப்ப மரத்தின் இலையானது, நமது சருமத்தில் ஏற்படக்கூடிய தொற்றுகளைத் தடுப்பது மட்டுமல்லாமல், நமது இரத்தத்தைச் சுத்திகரிக்கக் கூடிய ஒன்றாகவும் செயற்படுகிறது.
துளசி இலையானது பெரும்பாலும் சுவாசப் பிரச்சினைகளுக்கு ஒரு தீர்வாக அமைகிறது. மேலும் நமது நோய் எதிர்ப்புச் சக்தியை மேம்படுத்துவதற்கு துளசி இலைகள் சிறந்தது.
கற்றாழை, சருமத்தில் உள்ள வெட்டுக்காயங்கள், தீக்காயம் போன்றவற்றிற்குச் சிகிச்சை அளிக்கவும், தலைமுடிக்கு ஒரு இயற்கையான Hair Conditioner ஆகவும் பயன்படுகின்றது.
நாம் அன்றாடம் சமையலுக்குப் பயன்படுத்தும் கறிவேப்பிலையானது உணவு செரிமானத்தைச் சரி செய்யவும், தலைமுடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.
நாம் அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ளும் முருங்கைக் கீரையானது ஊட்டச்சத்துக் குறைபாடு தொடர்பான பிரச்சினைகளுக்கும், பல்வேறு விதமான உடல்நலக் கோளாறுகளுக்கும் சிகிச்சை அளிக்க உதவுகிறது.
புதினா இலைகள், செரிமானத்திற்கு உதவுகிறது. அத்துடன் புதினா இலைகள் சமையலிலும், புத்துணர்ச்சி அளிக்கக்கூடிய பானங்களைத் தயாரிக்கவும் பயன்படுகிறது.
இவ்வாறான மருத்துவக் குணங்கள் நிறைந்த இலைகளைப் பயன்படுத்தினால் பல நோய்களிலிருந்து எம்மைப் பாதுகாத்துக் கொள்ளலாம்.