இந்தியாவின் கேரளா மாநிலத்தின் வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவின் போது சிக்கியவர்களை மீட்புப் படையினர் காப்பாற்றி வரும் நிலையில், வயநாடு பகுதியில் உள்ள பாட்டி மற்றும் பேத்தி ஆகியோரை 3 யானைகள் காப்பாற்றிய சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
வயநாடு சூரல்மலையைச் சேர்ந்த பாட்டி ஒருவரும் அவரின் பேத்தியும் நிலச்சரிவில் சிக்கி உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் அவர்களுக்கு மிக அருகில் 3 யானைகள் தஞ்சமடைந்துள்ளன.
யானைகளைக்கண்டு அச்சமடைந்த இருவரும் யானைகள் முன் மண்டியிட்டு, ஏற்கனவே தாங்கள் பெரிய துயரத்தை சந்தித்துள்ளதாகவும், தங்களைத்தாக்க வேண்டாம் எனவும் யானைகளிடம் கெஞ்சியதாக பாட்டி தெரிவித்துள்ளார்.
தனது உணர்வுகளைப் புரிந்து கொண்ட யானைகள் கண்ணீருடன் காதை அசைத்தபடி நின்றிருந்ததாக பாட்டி நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
சுற்றிலும் இருள் சூழ்ந்த பகுதியில் உதவி கேட்டு யானையிடம் மன்றாடிய இருவரையும் யானைக்கூட்டம் எதுவும் செய்யாமல் அவர்களுக்கு பாதுகாப்பாக அங்கேயே நின்றதாகவும் மறுநாள் அதிகாலை வரை அவர்களுக்கு பாதுகாப்பு அரணாக நின்ற யானைக்கூட்டம், மீட்புப் படையினர் அவ்விடத்திற்கு வந்ததும் அங்கிருந்து விலகிச் சென்றதாகவும் தெரிவித்துள்ளார்.
நிலச்சரிவில் சிக்கி உயிர்பிழைத்து வந்துள்ள குறித்த இருவரும் தற்போது மேப்பாடியில் உள்ள தற்காலிக முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.