எமது உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை நாம் அன்றாடம் உண்ணும் உணவுகளின் மூலமாக பெற்றுக்கொள்கிறோம்.
அதிலும் முக்கியமாக எமது உடலுக்குத் தேவையான இரும்புச் சத்துக்களை கீரை வகைகளில் இருந்து பெற்றுக்கொள்ள முடியும். ஆகவே கீரை வகைகளை உண்பதால் ஏற்படும் நன்மைகளை இந்தப் பதிவில் காணலாம்.
கீரை வகைகளில் அகத்திக்கீரை, பாலக்கீரை, தண்டுக்கீரை, புளிச்சக்கீரை, வெந்தயக்கீரை, முருங்கைக் கீரை,வல்லாரை போன்ற பல வகைகள் உண்டு. இதில் நாம் தினமும் ஒரு கீரை வகையினை உணவில் சேர்த்தால் உடல் ஆரோக்கியத்துடன் இருக்கலாம். கீரைகளை தினமும் உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம், இரத்தச் சோகை வருவதைத் தடுத்து, சிறந்த உடல் நலனைப் பெறலாம்.
உடல் இயக்கத்திற்கு நார்ச்சத்து மிக அத்தியாவசியமாகும். அந்த நார்ச்சத்து கீரைகளில் அதிகளவு கிடைக்கின்றது.
இத்தகைய கீரைகளை உட்கொள்வதனால் செரிமானக் கோளாறுகள் தடுக்கப்படும்.
சரியான நேரத்தில் பசியைத் தூண்டுவதற்கு கீரைகளில் உள்ள நார்ச்சத்து உதவுகிறது. குடலியக்க மாறுபாட்டைத் தடுப்பதுடன், நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிப்பிலும் கீரைகளின் பங்கு மிகவும் முக்கியமானதாகும்.
கீரைகளைச் சாப்பிடும்போது இதயத்தின் செயற்பாடு பாதிக்காமல் இருப்பதுடன், கீரைகளில் உள்ள நைட்ரேட், இரத்த அழுத்தத்தைக் குறைத்து இதயத்திற்கு சீரான அளவில் இரத்தத்தை அனுப்புகிறது. கீரையில் Vittamin c நிறைந்துள்ளது. இது நோய்த்தொற்று ஏற்படுவதற்கான அபாயத்தைத் தடுக்க உதவுவதோடு,நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது.
எனவே இத்தனை நன்மைகள் நிறைந்த கீரை வகைகளை தினமும் உணவில் சேர்த்து ஆரோக்கியமாக வாழ்ந்திடுங்கள்.